யுத்தநிறுத்த அழைப்புகளை விடுத்துவருவது தொடர்பாக மேற்கு நாடுகளை இலங்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளது.
யுத்தநிறுத்தத்தை மேற்கொள்வதன் மூலம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழுமையான வெற்றியை ஈட்டமுடியாமல் போய்விடுமென கருதப்படுவதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை நேற்று தெரிவித்திருக்கிறது.
யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு விடுதலைப் புலிகள் பிரான்ஸையும் பிரிட்டனையும் கேட்டுள்ளனர். ஆனால் புலிகள் முற்றாக ஒழிக்கப்படும்வரை தொடர்ந்து நடவடிக்கைகள் இடம்பெறுமென அரசு சூளுரைத்திருக்கிறது.
வன்னியில் மோதல் சூன்யப் பகுதியில் அகப்பட்டிருக்கும் 50 ஆயிரம் பொதுமக்களின் நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை செலுத்தியுள்ளது.
அண்மைய காலத்தில் இலங்கை தொடர்பாக மேற்குலக சக்திகள் காட்டும் பாசாங்குத்தனமும் முகமூடி அணிந்த தன்மையும்
அபரிமிதமான புனிதத்தன்மையும் வரலாற்றில் ஒருபோதும் இடம் பெற்றதில்லை என்று தனது இணையத்தளத்தில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் கேலிக்கிடமான வலியுறுத்தல்களை மேற்கு நாடுகள் முன்வைப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், புலிகளின் தலைவர்களை மீட்டெடுத்தல், யுத்த நிறுத்தத்துக்கு இணங்குதல் போன்ற கோரிக்கைகள் மேற்குலகால் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வியாழக்கிழமை திரும்பிச் சென்ற பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் மோதலை நிறுத்துமாறும் மோதல் வலயத்திற்கு மனிதாபிமானப் பணியாளர்கள் செல்வதற்கு இடமளிக்குமாறும் வலியுறுத்தியிருந்தனர்.
மேற்குலக சக்திகளின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்ட விதத்தில் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் முழு மனதுடன் ஆதரவளிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது நிலைமை தொடர்பான அவர்களின் புரிந்துணர்வு, அவர்கள் எம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை என்பன இல்லாவிடின் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில் இவ்வளவு தூரத்திற்கு எம்மால் வந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறது.
இரத்தப் பெருக்கை முடிவுக்கு கொண்டுவர உடனடி யுத்த நிறுத்தத்தை விரும்புவதாக பிரிட்டிஷ், பிரெஞ்சு அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மோதல் சூன்யப் பகுதியில் ஷெல் தாக்குதல் இடம்பெற்றதாக ஐ.நா. ஆதரவுடன் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை சனிக்கிழமை இலங்கை நிராகரித்திருந்தது.
அறிவியல் ரீதியான பெறுமதி அந்த செய்மதிப் படங்களில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உங்களுக்கு பாடம்சொல்லித் தந்தவர்களுக்கு>நீங்கள பாடம் சொல்லிக் கொடுக்க முற்படும்போது> உங்களுக்கு பாசாங்கு> அவர்களுக்கு நீங்கள் சட்டம்பியார் இலலையென்ற நினைப்பு!