294 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதே பாஜக வெற்றி பெறுவதற்காகத்தான் என்ற விமர்சனம் கடுமையாக முன் வைக்கப்பட்ட நிலையில் 4-ஆம் கட்ட தேர்தல் இன்று நடந்தது. இன்று 44 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் எஞ்சிய 4 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இன்று நடந்த தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்தது. வேட்பாளர்கள், ஊடகங்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.இதற்கிடையில், அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களாகவே மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பாஜக பயன்படுத்துவதாகவும் வாக்களிக்க வரும் வாக்காளர்களை அச்சுறுத்தி துரத்துவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்திய நிலையில் மத்திய ரிசர்வ் படையினரே இந்த கலவரங்களுக்கு காரணம் என மம்தா குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில், கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதியில் உள்ள ஜார்பட்கி பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நாளை நேரில் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.