23.10.2008.
முதலாளித்துவம் நெருக்கடியில் தத்தளிக்கிறது. மேற்குலகில் மார்க்சின் செல்வாக்கு மீண்டும் பரவுகிறது. ஐரோப்பாவில் மார்க்சின் உன்னதப்படைப்பான மூலதனம் (டாஸ்கேபிடல்) நூல் தொகுப்புகள் பரபரப்பாக விற்பனையாகின்றன.
மார்க்ஸ் பிறந்த ஜெர்மனியில் மூலதனம் நூல் அமோகமாக விற்பனையாகி வருகிறது. வீழ்ச்சியடைந்த வங்கியாளர்கள், சுதந்திரச் சந்தையின் பொருளாதார நிபுணர்கள் உலகப்பொருளாதார வீழ்ச்சி குறித்து மூலதனத்தைப் படித்து தங்கள் மூளையில் ஏற்றி வருகிறார்கள். பெர்லினில் உள்ள டைட்ஸ் புத்தக நிறுவனத்தின் தலைவரான ஜோர்ன் குட்ரம்ப் என்பவர் மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மார்க்சின் மீது மீண்டும் கவர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். “புதிய தலைமுறையைச் சேர்ந்த வாசகர்கள் வந்து நூல்களை வாங்கிச் செல்கிறார்கள். பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இவர்கள் நவீன தாராளமயம் எத்தனை தவறான கனவு என்பதை அடையாளம் காண்பதற்கு துடிக்கிறார்கள்” என்று டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
டிரியர் நகரிலுள்ள மார்க்சின் பிறந்த இடத்திற்கு வரும் பார்வையாளர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அலெக்சாண்டர் குலூஜ் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் மூலதனம் நூலை திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளார்.
மேலைய நாடுகளின் தலைவர்கள் ஒரு காலத்தில் மார்க்சின் அடர்த்தியான தடித்த புத்தகத்தை அலட்சியப்படுத்தினர். இழிவாய் நிராகரித்தனர். கடந்த சில வாரங்களாக அவர்களுக்கு மறுசிந்தனை வந்திருக்கிறது. பிரெஞ்சு அதிபர் சர்க்கோசியும் ஜெர்மன் நிதியமைச்சர் பீர்ஸ்டீபன்பர்க்கும் நூலைப் பாராட்டிப் பேசியுள்ளனர். போப்பாண்டவரும் மூலனத்தை மகத்தான ஆராய்ச்சி நூல் என்று புகழ்ந்துள்ளார்.
லண்டன் கான்டென்பரி சர்ச்சின் ஆர்ச் பிஷப்ரோவின் வில்லியம்ஸ் முதலாளித்துவம் பற்றி ஒளிவீசும் முறையில் மார்க்ஸ் கூறிய நிர்ணயிப்புகளை நினைவு கூர்ந்தார். “மார்க்ஸ் நீண்ட காலத்திற்கு முன்பே கடிவாளமிடப்படாத முதலாளித்துவ வழிமுறைகள் குறித்து கவனித்துக் கூறினார். முதலாளித்துவம் கற்பனையானது என்றும், அனைத்துக்கும் பொறுப்பாளி என்றும், அதிகாரம் செலுத்தி பண்டங்களின் தரகராய் வக்கற்றுப் போகிறார்கள்” என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளதாய் கூறியுள்ளார்.
சில சுதந்திரச் சந்தைக்கான பிரிட்டிஷ் பத்திரிகைகளான டைம்ஸ், டெல்லி டெலிகிராப் ஆகியவை திடீரென
மார்க்சின் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன. ஆன்மாவைத் தேடும் அலை அங்கே கிளம்பி மார்க்ஸ் கூறியவை சரியா என்று அவை ஆய்வு செய்கின்றன.
பிரித்தானியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி வேகமாக அதிகரித்து செல்லுவதாகவும் உதாரணமாக விக்ரோரியா பெக்கம் தனது கால் செருப்புக்களுக்கேற்ற நிறத்தில் தான் பயணிக்க இருக்கும் காரின் நிறத்தை தெரிவு செய்வதாகவும் இந்த நிலை குறித்து கவனம் எடுக்கப்பட வேண்டும் எனவும் பத்திரிகைகள் எழுதுகின்றன.
ஏழகைளின் வறுமை ,இயலாமை குறித்தல்ல பண்க்காரர்களின் இத்தகைய நுகர்வு வெறியை பார்த்து மக்கள் கொதித்தெழுந்து விடுவார்களோ என்றுதான் பத்திரிகைகள் அஞ்சுகின்றன.எச்சரிக்கின்றன.