முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ராஜீவ் காந்தி கொலையுடன் நேரடியாகத் தொடர்பற்றவர்கள். இம் மூவரையும் கொலைசெய்த பின்னர் வழக்கை முடிவிற்குக் கொண்டுவருவதனூடாக கொலையின் சூத்திரதாரிகளைக் காப்பாற்றுவதே மத்திய அரசின் நோக்கமா என பரவலாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்துவிட்டு, பிறகு நிராகரித்திருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவர்களின் மனுவிற்கு 8 வார காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், மனுவின் மீதான தீர்ப்பு அளிக்கப்படும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் நேர் நின்ற கூடுதல் தலைமை வழக்குரைஞர் எம்.இரவீந்திரன், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிடுவதே சரியான வழிமுறையாகும் என்றும், இதில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் வாதிட்டார்.
அதுமட்டுமின்றி, மூவரின் மனு மீதான விசாரணையை தமிழ்நாட்டில் இருந்து வேறொரு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சுட்டிக்காட்டிய மத்திய அரசு வழக்குரைஞர் இரவீந்திரன், உச்ச நீதிமன்றம் அந்த மனு மீது தீர்ப்பு வழங்கும்வரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூவர் மனு மீதான விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று மட்டுமே மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டுள்ளார். அவர்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுக்காலம் கழித்து நிராகரித்ததற்கு காரணம் என்ன என்பதைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.