மத்தியில் ஆளும் மோடி அரசால் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் கைவிடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இச்சட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய அவரது உரையில், ”2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளோம். விவசாயிகளின் வேதனையை நேரடியாக அறிவேன். நாட்டின் விவசாயிகளில் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் சிறு விவசாயிகளை வலுப்படுத்தும். விவசாய சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாயிகளுக்கு நன்றி. 3 வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது விவசாயிகளின் உயிர்த்தியாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்கள் போராடும் விவசாயிகள்!