இந்தியாவை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சட்டமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமான சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர்,
“விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டம் விவசாயிகளின் பேர வலிமையைகுறைத்து விடுகிறது. விவசாயிகளின் பாதுகாப்பை இச்சட்டங்கள் பாதுகாப்பதற்கு பதில் கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகள் அடகு வைப்பதாக இருக்கிறது. அரசாங்கம் விவசாயிகளிடம் கொள் முதல் செய்வதலிருந்து விலகிவிடுவதால், நேரடியாக விவசாயிகள் கார்ப்பரேட்டுகளிடம் சிக்குவார்கள். அது உணவு , உணவுப்பாதுகாப்பை பாதிப்பதோடு உணவு பதுக்கல், கள்ளச் சந்தையை பலப்படுத்தவே இது பயன்படும். ஒரு பக்கம் விவசாயிகள் உற்பத்தி செய விளை பொருளுக்கு விலை இல்லாமல் திண்டாடும் நிலையில், உணவு பற்றாக்குறையே ஏற்படும் சூழலை இந்தச் சட்டம் வழி வகுக்கும்” என்று பேசினார்.
ஆளும் சிபிஎம் கட்சி இந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. பாஜகவின் ஒற்றை உறுப்பினரான ஓ.ராஜகோபால் மட்டும் தீர்மானத்தில் இடம் பெற்ற அம்சத்தை எதிர்த்தார். ஆனால் மசோதாவை ஆதரித்தார். அரசின் முடிவுகளை ஆதரிக்கிறேன் என்றும் கூறினார். கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி இந்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட கேரள அரசு முடிவு செய்த போது அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது அரசின் கோரிக்கையை நிராகரித்தார். இப்போது தாமாக முன் வந்து இந்த சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. பின்னர் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.