1951 -ம் ஆண்டு ”வீரகேசரி” பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 – ம் ஆண்டு ”ஈழநாடு” பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார்.
செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள் – வசனங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்படாது மிகச் சிறப்பாகத் திருத்தங்கள் இவர் செய்வதை எல்லோரும் பாராட்டுவர்.
பல பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து வளர்த்துவிட்டவர். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்தவர்.
”ஈழநாடு” பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய ”முரசொலி” பத்திரிகையிலும் பணிபுரிந்தார்.
சிறுகதைகள் – குட்டிக்கதைகள் பல எழுதியவர். நூல்களாகவும் வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது.
யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள்வரை அன்பாகப் பழகி இலக்கிய உரையாடல் செய்வதில் மகிழ்ச்சியடைந்தவர்.
போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து தமிழ்நாடு – திருச்சி நகரில் மனைவியோடு அமைதியாக வாழ்ந்துவந்தார்.
பிள்ளைகள் – பேரப்பிள்ளைகள் கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தார்.
2010 -ம் ஆண்டு அக்டோபர் 10- ம் திகதி திருச்சி நகரில் இவரது அபிமானிகளால் இவரின் ”முத்துவிழா” சிறப்புறக் கொண்டாடப்பட்டது. ”இனிய நந்தவனம்” சஞ்சிகை முத்துவிழா மலர் வெளியிட்டுக் கௌரவித்தது.
யான் கடந்த மே மாதம் (2012) திருச்சி சென்று ஒரு நாள் இவரோடு தங்கி பலஆண்டுகள் நாம் சந்தித்துப்பேச முடியாமல்போன அரசியல் – இலக்கிய விடயங்கள் – சர்ச்சைகள் குறித்து மிகவும் சுவராசியமாகப் பேசிக்கொண்டேன்.
இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..!
அவரது மறைவை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது..!
அன்னாருக்கு எமது அஞ்சலிகள்..!!
– வி. ரி. இளங்கோவன்
(பிரான்சு)
Our salutes. Late Pundit Veerakathy was a good conduit for me in Jaffna from 1978 to 1981.