இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான காவலூர் இராஜதுரை அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 14 -ம் திகதி (14 – 10 – 2014) செவ்வாய்க்கிழமை மாலை காலமான செய்தி மனவருத்தத்தைத் தருகிறது.
பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும், அத்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல, அதன் நுட்பங்களையும் உணர்ந்து, தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்த ஒரு சிலருள் ‘பல்கலைவேந்தர்’ சில்லையூர் செல்வராசன், காவலூர் இராஜதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் இரட்டையர்கள் போன்று மிகுந்த நட்புடன் இயங்கி வந்தவர்கள்.
‘விளம்பரத்துறை’ என்ற தனது நூலில், ‘விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன்’ என்ற தலைப்பில் காவலூர் இராஜதுரை எழுதியுள்ள கட்டுரை ஊடகத்துறையில் ஈடுபடுவோர்க்கு விளம்பரத்துறை குறித்த தகவல் தரும் சிறந்ததோர் கட்டுரையாகும்.
காவலூர் இராஜதுரையின் கதை வசனத்தில் அவரது மைத்துனர் தயாரித்து புகழ்பெற்ற இயக்குனர் தர்மசேன பத்திராஜா இயக்கிய ‘பொன்மணி’ திரைப்படம் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்திற்குரியதாகும். சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத் தயாரிப்பின்போது யாழ்நகரில் காவலூர் இராஜதுரையோடு சில நாட்கள் செயற்பட்டமை ஞாபகத்தில் நிற்கிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக எழுபதுகளில் அவர் கடமையாற்றியபோது ‘கிராமவளம்’ மற்றும் கிராமிய நிகழ்ச்சிகளுக்காக, அவருக்கு உதவியாக நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு முதல் வடபகுதியின் பல கிராமங்களுக்கும் சென்று ஒலிப்பதிவுகளை மேற்கொண்டமையும், புங்குடுதீவில் எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்து ‘பொன்மணி’ திரைப்படத் தயாரிப்புக் குறித்தும் கலை இலக்கிய விடயங்கள் குறித்தும் நிறையவே பேசிக்கொண்டமையும் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றது.
அவர் யாழ்நகர் வந்தால் ‘மக்கள் எழத்தாளர்’ கே. டானியலின் விருந்தினராக உபசரிக்கப்படுவார்.
அந்நாட்களில் யான் கொழும்பு செல்லும்போதெல்லாம் சில்லையூரையும் காவலூரையும் சந்தித்து நிறையவே பேசிக்கொள்வதுண்டு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய அ. சிறிஸ்கந்தராசா (தற்போது கனடாவில் வசிக்கிறார்) கொழும்பு வீட்டிலும் நாம் எல்லோரும் சந்தித்துக்கொள்வதுண்டு. ‘பொன்மணி’ திரைப்படத்தின் பாடல்களையும் சில்லையூர் செல்வராசனே எழுதினார். அப்பாடல்கள் இரசிகர்கள் மனதில் பெரிதும் இடம்பிடித்த பாடல்களாகும்.
பத்திரிகைத்துறை, ஒலிபரப்புத்துறை, விளம்பரத்துறை, திரைப்படம் – தொலைக்காட்சித்துறை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல்துறைகளிலும் நீண்டகாலம் காவலூர் இராஜதுரை இயங்கியவர். தமிழில் விளம்பரத்துறை குறித்த நூலை முதன்முதலில் எழுதி வெளியிட்டவர்.
1978 -ம் ஆண்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலையிலிருந்து விடுபட்டுத் தனிப்பட்ட முறையில் விளம்பர நிறுவனமொன்றை நிறுவிய காவலூர் இராஜதுரை, குறுகிய காலத்தில் முன்னணி விளம்பர நிறுவனங்களுடன் போட்டியிட்டுச் சர்வதேச நிறுவனங்கள் பலவற்றுக்கும்கூட பிரதிநிதி நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தியவர்.
அவர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும் அவரது ‘வசீகரா’ விளம்பர நிறுவனத்தை அவரது மகன் சிறந்த முறையில் நடத்திவருகிறார்.
காவலூர் இராஜதுரை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகச் செயற்பட்டு வந்தவர். புலம்பெயர்ந்த பின்பு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் செயற்பட்டார். இச்சங்கத்தினர் அவரது பணிகளைப் பராட்டிக் கௌரவித்துள்ளார்கள்.
‘குழந்தை ஒரு தெய்வம்’, ‘ஒருவகை உறவு’ (சிறுகதைத் தொகுதிகள்) ‘வீடு யாருக்கு’ (குறுநாவல்) ‘விளம்பரத்துறை’ – தோற்றம் – வளர்ச்சி – ஆதிக்கம் என்பன அவரது குறிப்பிடத்தக்க நூல்களாகும்.
அவுஸ்திரேலியா சிட்னி நகரில் குடும்பத்துடன் வசித்துவந்த அவர், ஒருசில வருடங்களுக்கு முன்பு அன்பொழுக நீண்ட கடிதமும் தனது நூலொன்றும் எனக்கு அனுப்பியிருந்தார். 2006 -ம் ஆண்டு வெளிவந்த எனது சிறுகதைத் தொகுதி குறித்தும் சிலாகித்து எழதியிருந்தார். அந்நாட்களில் தொலைபேசி மூலம் அவருடன் உரையாட முடிந்தது. பின்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நண்பர் முருகபூபதி சொன்னார். முருகபூபதியுடன் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் காவலூரின் உடல்நலம் குறித்து விசாரித்துக்கொள்வேன்.
அவுஸ்திரேலியா செல்லும்போது நிச்சயம் காவலூரைப் போய்ப் பார்த்துவர வேண்டுமென நினைத்திருந்த எனக்கு, அவரது இழப்புச் செய்திதான் கிட்டியது. நண்பர் முருகபூபதி தான் செய்தி தெரிவித்தார்.
அன்பாகவும் பண்பாகவும் பழகிய அன்னாரின் இழப்பு கவலைக்குரியது.
இலங்கையின் தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் அவரது நாமம் நிலைத்து நிற்கும்..!
– வி. ரி. இளங்கோவன்
(பாரிஸ்)