முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிடப்பட்டு இனரீதியான பாகுபாடுடன் படுகொலை செய்யப்படுகின்ற சம்பவங்களை உடனடியாக அரசாங்கம் கட்டுப்படுத்த துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முஸ்லிம் இடதுசாரிகள் முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம்.பைசால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலவிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் கொழும்பில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றார்கள். முஸ்லிம் இளைஞர்கள் ஒரு வாரத்துக்குள் 7 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் இளைஞர்கள் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு அவர்களைத் துன்புறுத்தி அடையாளம் இல்லாதவாறு கொலை செய்யப்படுகின்றனர். அவர்களை யார் கொலை செய்ய அனுமதி கொடுத்தனர்.
குற்றவாளி கைது செய்யப்பட்டால் குற்றவாளியாக உறுதிப்படுத்துவதற்கு அல்லது தண்டனை அழிப்பதற்கு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் கொலை செய்து தெருவில் போட்டுவிட்டு பாதாள உலகம், குடு வியாபாரி, கொள்ளைக்காரர்கள் என்ற பல பட்டங்களைக் கொடுக்கின்றனர். பொலிஸார் இந்தக் கும்பலைக் கண்டு பிடித்து சமூகத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இவ்வாறான கொலைகளுக்கு அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான செயல்பாடுகளை முஸ்லிம் இடதுசாரி முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும். சமூகத்தின் பின்னணியில் எதிராக செயல்படுபவர்களை அடையாளம் காணவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அக்கருத்துக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இனரீதியாகத் திட்டமிட்டு இனப்படுகொலை நடத்துவதை அனுமதிக்க முடியாது.
சமத்துவம், ஜனநாயகம் கொண்ட நாடு என எமது நாட்டை வர்ணிக்கின்றோம். ஜனநாயகத்திற்குப் பதிலாக அராஜகமே இலங்கை மண்ணில் தலைவிரித்து ஆடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.