முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இன்று காலை 7.45 மணியளவில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள வைத்தியசாலையிலிருந்த 26 பேர் கொல்லப்பட்டதுடன், 100ற்கும் அதிமானவர்கள் காயடைந்துள்ளனர். இது குறித்து நான் கவலையடைகிறேன். இந்தப் பகுதியில் மருத்துவ உதவிவேண்டி ஆயிரக்கணக்கானவர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது என்றாலும், பொதுமக்களைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.