பாலஸ்தீனம் எங்கும் மறுபடி யூத சியோனிச பாசிஸ்டுக்களின் கோரத் தாக்குதலால் பிணங்கள் குவிகின்றன. அந்த மண்ணின் மக்கள் வாழ்ந்த தேசத்தை ஆக்கிரமித்து, வெறுமனே வரலாற்றுக் கதைகளை முன்வைத்து, இது தான் எங்கள் தேசம் என்று கூச்சலிடும் யூதர்களின் இஸ்ரேல் இரத்தத்தால் கட்டியெழுப்பப்படுகிறது. வரலாற்றின் கற்பனைக் கதைகளே ஒரு தேசத்தின் மக்களைக் கொசுக்களைப் போலக் கொன்று குவிப்பதற்கு ஆதாரமாக அமையுமானால் செவ்விந்தியர்களின் இரத்த்ததால் உருவான அமெரிக்காவே முதலில் அழிக்கப்பட வேண்டியிருக்கும்.
தேசங்கள் தோன்றிய காலத்தின் பின்னர் ஒரு தேசம் இன்னொரு தேசத்தை ஒடுக்குவதும், பல தேசங்கள் ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒன்றிணைந்து வாழ்வதும் காணக்கிடைக்கிறது. ஒரு தேசமாகவே அங்கீகரிக்கப்படக்கூடாத இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் அதற்கெதிரான பாலஸ்தீனிய மக்களின் யுத்தமும், ஈழப் போராட்டமும் ஒன்றல்ல என்றாலும் இரண்டுமே உரிமைக்கான போராட்டங்கள் தான்.
சுய நிர்ணைய உரிமைக்கான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம், சிங்கள பௌத்த பாசிச அரசாங்கத்தால் அழிக்கப்பட்டு இன்று 12 வருடங்கள் கடந்துபோய்விட்டன.
பாலஸ்தீனிய மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடுவதற்கு இருக்கின்ற அத்தனை நியாயங்களும் ஈழ மக்கள் போராடுவதற்கும் பொருந்தும். இரண்டு தேசங்களுமே விடுதலைக்காக போராடுவதற்கு நிர்பந்திக்கப்படுகிறன. பாலஸ்தீனியர்கள் இழந்துவிட்ட தமது பிரதேசங்களை மீட்பதற்கும், தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் சுய நிர்ணைய உரிமைக்காகவும் போராட வேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயம்.
முள்ளிவாய்க்காலில் மனித குலத்தின் ஒரு பகுதியை இரவோடு இரவாக அழித்து, இன்னொரு பகுதியை ஊனமுற்றவர்களாக்கிய இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் அனைவரும் இன்றும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு மக்களின் தலைவர்கள் என மார்தட்டிக்கொள்கிறார்கள். பச்சிழம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என்ற அத்தனை மக்களையும் கோழைத்தனமாகக் கொன்று குவித்துவிட்ட அதனை வெற்றியெனக் கொண்டாடிய மகிந்த குடும்பம் இன்று முழு நாட்டையும் சூறையாடிக்கொண்டிருக்கிறது. தண்டிக்கப்பட வெண்டிய குற்றவாளிகள் இன்று உலகின் பல்வேறு அரச பயங்கரவாதிகளின் முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள்; தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல மொத்த மனிதகுலத்திற்குமே எதிரான இந்தக் கும்பல் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
தேசங்களதும், தேசிய இனங்களதும் அடிப்படை ஜன நாயக உரிமையான சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்படால் மட்டுமே இலங்கை முழுவதும் விடுதலை பெறுவதற்கான சூழல் தோன்றும்.
பாலஸ்தீனிய மக்கள் இன்னும் போராட வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். காஸாவிலிருந்து இஸ்ரேலிய ஆதரவு ஆயுதக் குழுக்கள் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற ஆரம்பித்த போது மக்கள் வெளியேற மறுத்து போராட்டத்தில் இறங்கிய போதே இன்றைய புதிய அழிப்பை இஸ்ரேல் ஆரம்பித்தது. ஈழத்தில் மக்கள் போராடுவதும், அதற்கான எதிர்காலத் திட்டத்தை மக்கள் சார்ந்து வகுத்துக்கொள்வதும் இன்றும் அவசரத் தேவையாகவும் வாழ்வதற்கான முன் நிபந்தனையாகவும் காணப்படுகிறது.
“இதுவரையில் விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம், விமர்சனத்திற்கு அப்பால்பட்டது, அந்த அமைப்பின் ஒவ்வொரு அசைவுகளும் சரியான திசை வழியிலேயே சென்றது, அதுவே தோற்றுப் போய்விட்டது,ஆகவே இனிமேல் போராட்டம் என்பது சாத்தியமற்றது” என்ற உளவியல் யுத்தம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த உளவியல் யுத்தமே கடந்த 12 வருடங்களாக போராட்டத்தை இல்லது ஒழிப்பதற்கான அடிப்படையை வகுத்துக்கொடுத்தது.
இது மக்களை அச்சத்திற்கு உள்ளாகியதில் பெரும் பங்கை வகித்தது. பொதுவாகப் புலம்பெயர் நாடுகளிலும், குறிப்பாக தமிழகத்திலும் இயங்கும் குழுக்களே இந்த உளவியல் யுத்தத்தை மிகவும் தந்திரோபாயமாக நேர்த்தியாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த காலப் போராட்டத்தை விமர்சிப்பதும், தோல்விக்கும் அழிவிற்குமான காரணங்களை மதிப்பீடு செய்வதுமே எதிர்காலத்தில் போரட்ட அரசியல் உருவாக்குவதற்கான முன் நிபந்தனை. துதிபாடும் கும்பல்கள் இனவழிப்பிற்கு துணை செல்கின்றன என்பது மட்டுமன்றி, பௌத்த சிங்கள பேரினவாத அரசின் தொடர்ச்சியான இனச்சுத்திகரிப்பை இலகுவாக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றன. என்றாவது ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கடந்தகாலம் தொடர்பான விமர்சன சுய விமர்சனத்தில் ஆரம்பிக்குமானால் அதுவே புதிய போராட்டத்தின் ஆரம்பமாக அமையும்.
-இனியொரு