நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இந்த அணை இருப்பதால் இதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று அண்மையில் கேரளா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஓரிரு முறையே நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆதாரங்களுடன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருந்தார்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த அணையின் உறுதி குறித்து ஆய்வு செய்வதற்காக ஐந்து உறுப்பினர்களை கொண்ட நிபுணர் குழுவை நியமித்தது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தமிழக மற்றும் கேரளாவை சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சி.டி.தாட்டே, டி.கே.மேத்தா ஆகியோர் அண்மையில் அணைப் பகுதியை சுற்றிப் பார்த்தார்கள். முதலில் கீழ் அணையில் உள்ள பம்லா அணையை பார்த்தார்கள். பின்னர் இடுக்கி, குளமாவூர், செருத்தோணி ஆகிய அணைகளையும் அவர்கள் பார்வையிட்டார்கள். அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து அவர்கள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார்கள்.
இந்த நிலையில் இன்று ஐவர் குழு கூடியது. அப்போது குழு உறுப்பினர்களுடன் தமிழக, கேரள மாநில அரசு வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள். அப்போது தாட்டே மேத்தா ஆகியோர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில் தாங்கள் சமீபத்தில் அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது குறித்த விவரங்களையும், முடிவுகளையும் இரு நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். அதில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் நிலநடுக்கம் மிக மிக சிறிய அளவிலேயே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லையென்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்புடைய பதிவுகள்: