ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று இரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜெயலலிதா ” முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும்” என்று முதல்வர் அறிவித்தார்.
தூக்கு தண்டனையை இரத்து செய்து நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432இன் படி தமிழக அரசு மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என பரிந்துரைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
This is real POLITICS…
Oh yeah ? Then what is unreal politics ??