மும்பையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று அதிகாலையில் நடந்த வெடிவிபத்தில் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.மும்பை அந்தேரி கிழக்கு, சாக்கிநாக்காவில் குடிசைப் பகுதியையொட்டி அலுமினிய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலை இடிந்து அருகில் உள்ள குடிசை பகுதியில் விழுந்தது. இதில், அங்கிருந்த சாவ்கா பட்டேல் என்பவரின் வீடு உட்பட சில வீடுகளின் சுவரும் இடிந்து விழுந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து சாவ்கா பட்டேல்(55) மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பாரதி(32), கணேஷ்(25), மனீஷா(15), நேஹா(13) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன.மேலும் சாவ்கா பட்டேல் குடும்பத்தை சேர்ந்த மங்கேஷ் (30), தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்கள் அமித் (27), பையாலால்(25) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரண்டு தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறைந்தபட்சப் பாதுகாப்புக்கூட இல்லாத முகமுழந்த வல்லரசு இந்தியா!