13.12.2008.
மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜமாத்உத்தவா இயக்கத்தின் தலைவர் ஹபிஸ் மொஹமட் சயீத்தை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது.
மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக இந்தியா தெரிவிக்கும் லஷ்கர் இதொய்பா இயக்கத்தை சயீத்தே நிறுவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜமாத்உத் தவா அமைப்பிற்கு ஐ.நா.தடை விதித்ததைத் தொடர்ந்து சயீத்தின் அலுவலகங்கள் அனைத்தையும் அதிகாரிகள் மூடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு பூராகவுமுள்ள ஜமாத் உத் தவா அமைப்பின் அலுவலகங்கள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு பாகிஸ்தானின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டுக்காவலில் வைக்கப்படுவதற்கு முன்னர் பி.பி.ஸி.க்கு வழங்கிய நேர்காணலில், மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லையெனவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தமது அலுவலகம் உதவுவதில்லையெனவும் சயீத் தெரிவித்திருந்தார்.
சயீத்தும் ஜமாத்உத்தவா அறக்கட்டளையை சேர்ந்த மேலும் 4 அதிகாரிகளும் லாகூரிலுள்ள வீட்டில் மூன்று மாத கால வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக லாகூரின் பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியா புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளது. இதற்குள் கரையோர பாதுகாப்பை பலப்படுத்தல், புதியதொரு தேசிய விசாரணை முகவர் அமைப்பை உருவாக்குதல், பொலிஸாருக்கான பயிற்சியை அதிகரித்தல் மற்றும் பயங்ரவாதத்திற்கெதிரான சட்டங்களை பலப்படுத்தல் போன்ற நடைமுறைகளும் உள்ளடங்குவதாக புதிய உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு சென்றுள்ள அமெரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் நெக்ரோ பொண்டேயுடன் சந்திப்புகளை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஐ.நா.வின் தீர்மானத்தை பாகிஸ்தான் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் சர்வதேசத்திற்கான கடமைகளை பாகிஸ்தான் நிறைவேற்றுமெனவும் தெரிவித்துள்ளார்.