பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்துவரும் நிலையில், பாதுகாப்பு தயார் நிலை குறித்து முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இக்கூட்டத்தில் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் கலந்துகொண்டார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி மும்பையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசின் போக்கு தலைகீழாக மாறிவிட்ட நிலையில், அந்நாட்டு எல்லையில் தனது படைப்பலத்தை பாகிஸ்தான் இராணுவம் அதிகரித்து வருகிறது.
தரைப்படைத் தளபதி தீபக் கபூர், விமானப்படைத் தளபதி ஃபாலி மேஜர், கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா ஆகியோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் நிலையில், அதற்கு மிகக் குறைந்த கால அவகாசத்தில் பதிலடி கொடுக்க நமது படைகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நமது நாட்டின் அணு ஆயுத கட்டளைத் தலைமையின் கூட்டம் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அது நடந்த 6 நாட்களில் நடந்துள்ள இக்கூட்டம் பாதுகாப்பு ரீதியான மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர், சியாச்சின் பனிமலைப் பகுதி உள்ளிட்ட நமது நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு கடந்த 23ஆம் தேதி சென்ற தளபதி தீபக் கபூர், நமது படைகளின் தயார் நிலையை சென்று பார்த்துவிட்டு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.