கோவா மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் கோவா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார்.
ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் கோவா மாநிலமும் ஒன்று. பாஜக, காங்கிரஸ்,சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் என பல கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை. அனைத்துக் கட்சிகளுமே தனித் தனியாக போட்டியிடுவதால் இந்த இடைத்தேர்தல்களில் பாஜக அதிக மாநிலங்களில் வெல்லும் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் தனக்கு பாஜக போட்டியிட வாய்ப்புக்கொடுக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகி பனாஜி தொகுதியில் தனித்து போட்டியிட இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “பாஜக அழிந்து வருகிறது. அவர்கள் என் தந்தையின் குடும்பத்தை அவமதித்து விட்டனர்” என்று குற்றம் சுமத்தினார்.
இதற்கிடையில் உத்பல் பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதால் அவரை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.