இலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார்.
எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில், ஒரு இறுதி நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முந்தைய சமரச முயற்சிகளை விடுதலைப் புலிகள் நகைப்புக்கிடமானவையாக மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கும் வகையில், மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தம் ஒன்று அமலுக்கு வரவேண்டும் என்று கோரும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த கருத்து வந்துள்ளது.