முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதி கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுகளாக வாழ்ந்த குடியிருப்புகளை இடிப்பதை எதிர்த்து கடந்த 5 நாட்களாக போராடி வந்த மக்கள் மீது காவல்துறை அடக்குமுறை கைது, மீண்டும் வீடுகள் இடிப்பு – வன்மையாக கண்டிப்போம்
– நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 58 குடியிருப்புக் கட்டிடங்கள் (150 குடும்பங்கள்) கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். கடந்த 10.12.21 அன்று சென்னை மாநகராட்சி ‘இவ்விடம் நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்று சொல்லி வீடுகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
ஆனால் ஒருநாள் கழித்து 12.12.21 அன்று காலை முதல் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கத் தொடங்கி விட்டனர். இதனை கண்டித்து அன்று முதல் மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். முதியவர்கள் கைக்குழந்தைகளோடு இளம்பெண்கள் என அவ்வை நகர் முதல் தெரு நுழைவாயிலில் மக்கள் இரவு பகலாக தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தெரு விளக்கை அணைத்து அச்சுறுத்தி வந்த காவல்துறை ‘முதல்வர், விடியல்’ என்ற வார்த்தைகளோடு மக்கள் முழக்கம் இடக்கூடாது என்றும், மீறி முழக்கம் இட்டால் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்போம் என்றும் மிரட்டி வந்தது.
நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமை கூட்டமைப்பு சார்பாக 17.12.21 அன்று ஒன்று கூடி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தோம். இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு அவ்வை நகருக்கு செல்லும் வழியை மறித்து தடுப்பரண்கள் போட்டு காவல்துறை மூலம் சுற்றிவளைத்து, வெளியில் இருந்து பார்க்கும் போது அவ்வை நகரில் நடப்பதை மறைப்பதற்கு லாரி ஒன்றை குறுக்கே நிறுத்தி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் உள்ளே புகுந்து போராட்ட இடத்திலிருந்த பெண்கள் முதியவர்கள் என அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர் (10 பெண்கள் உட்பட 19பேர்). மேலும் புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்க தொடங்கி விட்டனர். கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு அதிகாரியோ திமுக நிர்வாகிகளோ மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் ‘மாற்று இடம்’ குறித்து எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் மக்களை வன்முறையின் மூலம் வெளியேற்றுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அவ்வை நகரின் சுற்றுவட்டாரத்தில் அவ்வை நகர் தான் முதன்முதலில் உருவான வாழ்விடப் பகுதியாகும். இதைச் சுற்றி கே.கே.நகர், குமரன் நகர் போன்ற கல்வீடுகள், மாடி வீடுகள் அடங்கிய அடர்த்தியான குடியிருப்புகள் உள்ளன. இப்போது கொளத்தூரையும் வில்லிவாக்கத்தையும் இணைக்கும் மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் ( 2021) ஆம் மாத அளவில் இந்த மேம்பாலம் கட்டும் பொருட்டு அவ்வை நகரில் உள்ள வீடுகள் சில அகற்றப்பட வேண்டும் என்று சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், பாலத்தின் அகலம் சுமார் 28 அடி மற்றும் சர்வீஸ் ரோட்டுக்கான இடம் 15 இல் இருந்து 20 அடி தேவை என்ற கணக்கின்படி சாலையின் இருபுறமும் இருந்து ‘அளவுக் குறியீடு'( மார்க்கிங் – Marking) செய்துள்ளனர். அதன்படி சாலையோரம் உள்ள வீடுகளில் சில பகுதி மட்டுமே இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் ஒரு வீடு கூட அகற்றப்படாது என்றும் சொல்லப்பட்டது.( தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதியும் செய்யப்பட்டது) இந்த அடிப்படையில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடு கட்டுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர முன்வந்தனர். ஆனால், இப்போது மேம்பாலம், சர்வீஸ் ரோடு மற்றும் பூங்கா கட்டுதல் ஆகியவற்றுக்காக அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த வீடுகளும் அகற்றப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொல்கின்றனர். அதன்படி வரிசை வரிசையாக உள்ள வீடுகள் அனைத்தும் இடிக்கப்படும்.
எங்கே இருக்கிறது நீர்நிலை?
கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் இங்கே வசித்து வரும் நிலையில், ஏரி, குளம், குட்டை என்ற எந்த நீர்நிலையையும் மக்கள் அங்கே கண்டதில்லை. இன்று அப்பகுதி முழுக்க, முழுக்க கான்கிரீட் வீடுகள் நிரம்பிய பகுதியாக காட்சித் தருகிறது. ஒரு நீர்நிலை இருந்ததற்கான எந்த சுவடும் அங்கே தெரியவில்லை. இப்பகுதிகளில் உள்ள வீடுகளை எல்லாம் இடித்துவிட்டு புதிய நீர்நிலைகளை உருவாக்குவதற்கான சூழலும் அங்கு இல்லை. உண்மை இப்படி இருக்க, மேம்பாலத்திற்காக இடம் தேவைப்படும் என்று முன்பு சொன்ன அதிகாரிகள் இப்போது ’பெருமாள் தாங்கல் நீர்நிலை’ மீதான ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி அவ்வைநகர் வீடுகள் அனைத்தையும் இடிக்கப் பார்ப்பது திகைப்பூட்டுகிறது. அவ்வைநகர் வீடுகள் ’நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்றால் ஏனைய கேகே நகர், குமரன் நகர் வீடுகள் ’நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்ற வகையில் வராதா? அந்த வீடுகளும் இடிக்கப்படுமா? அப்படி இடிக்கப்பட்ட பின் கட்டப்படும் மேம்பாலம் நீர் நிலை ஆக்கிரமிப்பு என்ற வரையறையில் வராதா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அவற்றின் மீதான ஆக்கிரமிப்புகள் பற்றிய விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு பணித்திருக்கும் நிலையில், 07.12.21 அன்று தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் தமிழகம் தழுவி 4,800 அரசு கட்டிடங்கள், 8,700 வணிக கட்டிடங்கள் மற்றும் 3.2 லட்சம் குடியிருப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது. அரசு கட்டிடங்கள் ஒன்று கூட இதுவரை இடிக்காத நிலையில் குடியிருப்புகளை இடித்து மக்களை வீதியில் நிறுத்துவது எவ்வகைப்பட்ட சமூக நீதி ? முதல்வர் தொகுதியில் உள்ள மக்களுக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களின் நிலை என்னவாகும் என்ற ஐயம் எழுகிறது.