25.01.2009
பொலிவியாவில் புதிய அரசியலமைப்புத் திட்டம் குறித்த தேசிய வாக்கெடுப்பு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மதத்தின் தலையீடு அதிகரித்துள்ளது.
ஒரு கிறிஸ்தவ மத தேவாலயம் வெளியிட்டுள்ள தொலைக் காட்சி விளம்பர நிகழ்ச்சியில் பாரம்பரிய ஷாமன் உடையுடன் ஜனாதிபதி மொரால்ஸ் தோன்றுவார். அப்போது ஏசுவின் உருவமைப்பு ஒன்று உள்ளே வந்து மொரால்சை உதைத்து வெளியே தள்ளும். புதிய அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் தீயிட்டு எரிக்கப்படுவதுடன் இந்த விளம்பரம் முடிவடையும்.
சோசலிச இயக்கம் கட்சி தலைவரான ஈவோ மொரால்ஸ் ஒரு இடதுசாரி ஆவார். பொலிவியா எண்ணெய் வளங்களை நாட்டுடைமை ஆக்கியவர். அமெரிக்க தூதரை வெளியேற்றியவர். இதனால் முதலாளித்துவம் அவரை வீழ்த்தத் திட்டமிட்டு மதத்தைக் கையில் எடுத்துள்ளது. உள்ளூர் தெய்வமான பச்சமாமாவை வழிபடும் மக்களின் ஆதரவு இவருக்கு உண்டு. எனவே, முதலாளித்துவம் கிறிஸ்தவ மக்களை உசுப்பிவிட்டு மொரால்சை தோற்கடிக்க முயல்கிறது.
தங்களுடைய வர்க்க நலன்களைப் பாதுகாப்பதே முதலாளித்துவத்தின் லட்சியம். ஆனால், அதை நேரடியாகச் சொல்லாமல் மதத்தைக் கையில் எடுத்துள்ளனர். பொலிவியாவில் 97.5 சத வீதத்தினர் கிறிஸ்தவர்கள். மத குருமார்களின் கட்டளைக்கு பரவலான கீழ் படிதலும் உண்டு.
கடந்த சில நாட்களின் முதலாளித்துவ ஆதரவு பிரச்சாரங்களால் அரசியலமைப்புச் சட்டத்துக்கான ஆதரவு சரிந்து வருகிறது என்று முதலாளித்துவ பத்திரிகைகள் கூறுகின்றன. இருப்பினும் பொலிவியா நகர்ப்பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அரசியலமைப்புச் சட்டம் 40க்கு 37 சதவீதம் என முன்னிலையில் உள்ளது. அணிசாராதோர் மற்றும் கிராம மக்களின் வாக்குகளே தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும்.