உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் அவர்களின் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
முகாம்களில் பொதுமக்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பதால், அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், இந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதால் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, வட மாகாணத்துக்கான மீள்குடியேற்ற விவகாரங்களுக்கான அதிகாரி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 300,000 பேர் முற்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் தங்கவைக்கப்பட்டிருப்பதுடன், பாதுகாப்புத் தரப்பினரின் உரிய அனுமதியின்றி வெளியேற அனுமதிக்கப்படுவதில்லையெனவும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவத்தினரின் அனுமதியின்றி ஐ.நா. நிறுவனங்களோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ முகாம்களுக்குள் நுழையமுடியாதிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டிணி மற்றும் போசாக்கின்மையால் முகாம்களில் 30 பேர் உயிரிழந்தமையை வவுனியா நீதிமன்றம் பதிவுசெய்திருப்பதாகத் தமது மனுவில் குறிப்பிட்டிருக்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், முகாம்களில் அரசாங்கப் பணியாளர்கள், முதியவர்கள், சிறுவர்கள் குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினர் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முகாம்களிலுள்ள மக்களின் மனித உரிமைகளைக் கருத்தில்கொண்டு அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டுமெனவும் அந்த மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.