14.12.2008.
இந்தியவெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வருவதற்கான சாத்தியமில்லையென கூறும் இலங்கை அரசு தரப்பு, புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவும், இலங்கையும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயற்படவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரான கலாநிதி பாலித கோஹண, புதுடில்லி அரசியல் அழுத்தங்கள் எதையும் இலங்கை அரசுக்கு கொடுக்கவில்லையென்றும் அதற்கு மறுபுறமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கே ஆதரவு வழங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ளச் செல்லும் வழியில் டுபாயில் வைத்தே கலாநிதி கோஹண இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தமானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விடுதலைப்புலிகள் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும், வயதானவர்களையும் இராணுவ பயிற்சிகளுக்கு உட்படுத்தி வருகின்றனர். அத்துடன், இலங்கையில் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த வலியுறுத்துமாறு தமிழ் தரப்பிலிருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், டில்லியிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் வழங்கப்படவில்லை. அதற்கு எதிர்மறையாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்புகளுக்கே டில்லி அதன் ஆதரவை வழங்கியுள்ளது.
எமது இரு நாடுகளும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதியுடன் இருக்கின்றன. எமது இரு நாடுகளும் பயங்கரவாதத்தினால் நம்ப முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இது எம்மை தொடர்ந்தும் பாதிக்காத வகையில் உறுதிப்படுத்துவதற்கு இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.