வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் மீளக் குடியேற்றப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும் அவர்கள் இறுதியாக குடியிருந்த பிரதேசங்களில் குடியமர்த்தப்படவில்லையென ஜனாதிபதியின் ஆலோசகரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள் அவர்கள் வசித்து வந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்ற போதிலும் அவர்கள் தங்கியிருக்கக் கூடிய வசிப்பிடங்கள் இல்லாததுடன், அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டுநடத்த வழிவகைகள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடபகுதிக்கு விஜயம் செய்து அவற்றைக் கண்காணித்த பின்னரே வாசுதேவ நாணயக்கார இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள், பின்னர் அவர்களது ப+ர்வீக இடங்களில் உள்ள உறவினர், நண்பர்களின் வீடுகளில் சென்று வசிக்கப் போவதாகக் கூறி இந்த மக்கள் வெளியேறுவதாகவும் இந்த நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான தீர்வுகள் அரசாங்க அதிகாரிகளிடமும் இல்லையெனவும் வாசுதேவ தெரிவித்துள்ளார்.
வன்னியில் பயன்படுத்தப்படாத நூற்றுக் கணக்கான கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட பிரதேசங்கள் இருப்பதாகவும் இந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.