ஐந்து மாநில தேர்தல், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வர விருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் முடிந்த பாடில்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை விட கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியை சரி செய்யவே காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு நேரம் போதவில்லை.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில்காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. அங்கு அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். அவருக்கும் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் கடுமையான அரசியல் மோதல் நிலவி வருகிறது. சித்து பாஜகவுக்கு தாவி விடுவார் என்ற செய்திகள் வெளியான நிலையில் முதல்வர் பதவி அமரீந்தர் சிங்குக்கும், சித்துவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி என்றும் முடிவு செய்தது. சித்து தலைவர் ஆனதை அமரீந்தர் சிங் விரும்பவில்லை.
கடந்த பல மாதங்களாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய நிலையில் இந்த பிரச்சனை ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆனால் இப்போது அமரீந்தர் சிங்கிற்கு எதிராக நான்கு அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கிஉள்ளனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் விவகாரங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத்தை சந்தித்துப் பேச 4 அமைச்சர்களும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றுள்ளனர்.
இதே போன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் முதல்வராக உள்ளார். இரண்டரை ஆண்டுகள் அவர் முதல்வராக இருந்த நிலையில் மூத்த அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ பூபேஷ் பாகலை மாற்றி விட்டு தன்னை முதல்வராக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இருந்தால் முதலவ்ர்களாக இருப்பார்கள். அல்லது பாஜகவுக்கு போய் விடுவார்கள். ஆனால் பாஜகவில் போய் முதல்வர்களாக இருப்பர்களா என்றால் இல்லை. அங்கு போய் துணை அமைச்சர்களாக இருப்பார்கள்.
ஆளும் கட்சியான பாஜகவின் உளவுத்துறை உள்ளடி வேலைகளை காங்கிரஸ் கட்சியால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. தேர்தலுக்கு முன்னால் கட்சியை அடியோடு மாற்றியமைக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் அதை செய்ய முடியாமல் தவித்து வருகிறது காங்கிரஸ்.