தில்லி டிராக்டர் பேரணிக்குப் பின் போலீசார் உருவாக்கியிருக்கும் தடுப்பு அரண்களை பார்த்தேன் . பேரிகேட்களை குறுக்குவாட்டில் ரோட்டில் அடுக்கி கான்கிரீட் கலவை ஊற்றியிருக்கிறார்கள் .பல வரிசை கான்க்ரீட் தடுப்புகள் .கூரான ஆணிகள் பதித்த இரும்புப் பட்டைகளை ரோட்டில் பதித்திருக்கிறார்கள் . சுருள் முள் கம்பிகள் , போலீசாருக்கு லோக்கல் பட்டறை மேட் இரும்புத்தடி ஆயுதங்கள் .
இது ஏதோ குற்றங்கள் மலிந்த ,கேங்வார் நடக்கும் டிஸ்டோப்பியன் நகரம் ஒன்றை நினைவுறுத்தியது .
போலீசார் தரப்பில் மேலோட்டமாக பார்த்தால் இதற்கான நியாயங்கள் இருப்பது போல தோன்றலாம் . ஆனால் இதன் பின் இருக்கும் மனநிலையை யோசித்து பார்த்தால் பகீரென்கிறது. இது பிராக்டிகலாக பயன் உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி , இது விடுக்கும் செய்தி என்ன என்பது தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
அதாவது விவசாயிகள் ஆபத்தானவர்கள் , காட்டுமிராண்டிகள் , எதிரிகள் , தூரத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் .அவர்கள் வேறு அரசு வேறு என்று அடையாளப்படுத்தும் மனநிலை . இவ்வித நடவடிக்கைகளில் இருக்கும் ஒரு கீழ்மையான அவமதிப்பு அரசுக்கு புரியவில்லை . போராடும் விவசாயிகள் மீதான அடிப்படை மரியாதை இல்லாத கண்ணியமற்ற அணுகுமுறை இது .
இது ஏன் நிகழ்கிறது ?
நம் பண்பாட்டில் ஊறிப்போயிருக்கும் பாகுபாடு காட்டும் வழக்கம் என்பதன் வேறொரு மாதிரிதான் இது . நாம் பாகுபாடு என்ற உடனே சாதிய பாகுபாடு என்பதையே மனதுள் உருவகிப்போம் . ஆம் அது தான் மையமானது ஆனால் அது உருவாக்கும் இந்த பாகுபாட்டு சார்ந்த மனநிலை சாதியையும் கடந்தது . Caste is a structure , discrimination is a practice.
மனிதர்களை சமமான மரியாதை கொண்டவர்களாக நடத்தும் வழக்கம் நம் பண்பாட்டில் உருவாகவே இல்லை, அந்த எண்ணமே நம் சிந்தனை முறைக்கு அன்னியமானது. அங்கிருந்து கொண்டு நவீன ஐனநாயக வழுமியங்கள் நோக்கி வர நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் . முதலில் வேறுபாடாக அடையாளப்படுத்தியது மெல்ல திரிந்து பாகுபாடாகிறது , பாகுபாடு என்பது பின் கீழ் மேலாக graded ஆக அடுக்கப்படுகிறது.
“Differentiate ,Distance , Discriminate , Demonize ”
இதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குழுவை அல்லது ஒரு அடையாளத்தை மையத்தை விட்டு வெளி தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.இப்படி எவ்வளவு தூரம் ஒரு குழுவை நாம் வேறுபடுத்தி , பாகுபாடு காட்டி நம்மிலிருந்து தூர வைக்கிறோமே அவ்வளவுக்கு அவர்களின் மேல் நாம் மெல்ல மெல்ல empathy ஐ இழக்கத் துவங்குகிறோம் .
வெறுப்பும் ,அருவருப்பும், indifference உம் அந்த இடைவெளிகளை நிரப்ப ஆரம்பித்துவிடுகிறது . ஒரு கட்டத்தில் அவர்களை தீமையின் உருவமாகவே உருவகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம் .
மரபான சாதிய அடையாளத்தை முன்வைத்து தான் இந்த பாகுபாடு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில்லை.ஜெய் ஸ்ரீராம் , தேசப்பற்று , ஒரே தேசம் , வல்லரசு , மரபின் மூர்க்கம் போன்றவை எல்லாமே நவீன உயர் சாதியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.மாறாக ஆண்டி இந்தியன் , அர்பன் நக்ஸல் , காலிஸ்தான் விவசாயி, பிர்ஸ்டிடியூட், பிராந்தியவாதம் என்பதெல்லாம் நவீன தாழ்த்தப்பட்ட சாதிகள். அவ்வாறு தான் இன்று அவை நம் popular narration ஆல் கட்டமைக்கபடுகிறது
சில மாதங்களுக்கு முன்பு வரை நாட்டுக்கு உணவளிக்கும் இனமாக , இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக , சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக , மாடல் இந்தியனாக நாம் கொண்டாடிய பஞ்சாபியர்கள் இன்று திடீரென்று காலிஸ்தான் தீவிரவாதிகளாக , தேச துரோகிகளாக , கோடாலிக்காம்பாக மாறியிருக்கிறார்கள்.
இப்படி சாதிய இயங்கிலை நவீன ஜனநாயக கருத்தியல் செயல்பாட்டின் மீது superimpose செய்தது தான் பாரதிய ஜனதா கட்சியின் பெரும் சாதனை என்று சொல்லலாம். அதனால் தான் இங்கு ஜனநாயக செயல்பாட்டில் தகவல் சார்ந்த அறிவார்ந்த விவாதங்கள் நிகழ்வதில்லை , இங்கு உரையாடல் என்னும் வடிவில் நிகழ்ந்துகொண்டிருப்பது discrimination என்பதன் நவீன வடிவம் தான்.
இங்கு அதிகார மையம் செய்ய வேண்டியது ஒன்றே . யார் யார் “என்ன சாதி” என்று முத்திரை குத்துவதை மட்டும் செய்தால் போதும் இந்த நவீன சாதிய மனநிலை அதை தன்பாட்டுக்கு ஏற்கவோ எதிர்க்கவோ ஆரம்பித்துவிடும், தரவுகளோ , விவாதங்களோ ,அற அடிப்படைகளோ தேவையில்லை.
தேசப்பற்று இருக்கும். நாடு முக்கியம் , நாடு முன்னேற வேண்டும் , செழிப்பாக இருக்கவேண்டும் வல்லரசு ஆக வேண்டும் , மரபு பேணப்பட வேண்டும் என்றெல்லாம் கனவு இருக்கும் .ஆனால் நாட்டு மக்கள் நலன் என்று வரும்போது இந்த தேசப்பற்று என்பது காணாமல் போய்விடும் , திருதிருவென விழிப்பார்கள் . தேசம் வேறு மக்கள் வேறு என்றாகிவிடும் .இது தான் இந்திய மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியின் ஆதார கட்டமைப்பு .
சச்சின் டெண்டுல்கர் போன்றோர் அந்த மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியின் மனசாட்சிகளே .
நானும் சச்சின் ரசிகன் தான் , ஆனால் விவசாயிகள் போராட்டம் குறித்த அவரின் கருத்து ஆச்சரியமளிக்கவில்லை , வருத்தமாக இருந்தது . சச்சின் மேல் கோபப்படுவதில் பிரயோஜனம் இல்லை. அவரிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் இதை விளக்க முடியுமா என்றெல்லாம் கேட்டால் அவருக்கு தெரியாது . அவர் இப்பொது தேசப்பற்று சாதியின் ஒரு மெம்பர் , தேசவிரோத சாதி என்று உருவாக்கி அளிக்கப்பட்ட லேபிளின் மீது தனது discriminatory view ஐ கண்ணியமாக வெளிப்படுத்துகிறார் அவ்வளவுதான்.
அதனால் தான் வெளியிருந்து பார்ப்போருக்கு – இரண்டு மாதங்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் வீதியில் இறங்கி ஒரு sustained protest நிகழ்கிறது இது பெரிய விஷயம் அதில் எப்படியும் ஒரு தார்மீக நியாயம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அதே விஷயம் உள்நாட்டில் இருந்து கொண்டு , போராட்ட நிகழ்வுகளுக்கு அணுக்கமாக இருந்தாலும் , இந்த disrcriminatory கதையாடலுக்குள் இருந்து பார்க்கும் ஒருவருக்கு புராபகேண்டா தேசவிரோதம் என்று தோன்றுகிறது .