அரச அடக்குமுறை அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கில் பல பிரதேசங்களிலும் மாவீரர் நாளுக்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் சில இடங்களில் சுவரொட்டிகளும் சுவர் எழுத்துக்களும் காணப்பட்டன.
யாழ்ப்பாணம் நகரம் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேலாக விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் இருந்தது. தவிர யாழ்ப்பாண வீதிகள் முழுவதும் படைத்தரப்பினர் இரவிரவாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வீதி ரோந்துகளில் ஈடுபட்டதுடன் வீதியால் சென்ற மக்களிடம் விசாரணைகளையும் செய்தனர்.
நேற்றிரவு யாழ் பல்கலைக்கழக சூழலில் படைத்தரப்பின் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது. பல்கலைக்கழக விடுதி ஒன்றின் மேல்மாடியில் பெரும் விளக்கு ஒன்றை மாணவர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து படைத்தரப்பினர் பொல்லு தடிகளுடன் விடுதிக்குள் நுழைந்துள்ளனர். அதிகாலை வரை பல்கலைக்கழக சூழலை படைத்தரப்பு தீவிரமாக கண்காணித்தது.
யாழ் தினக்குரல் பத்திரிகை காரியாலயம் பெரும் அபாயகராமான அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொல்லுகள் தடிகளுடன் பத்திரிகை காரியாலத்தை சுற்றி வளைத்து அச்சுறுத்தியிருக்கின்றனர். மாவீரர் நாளை அண்டி யாழ் பல்கலைக்கழகத்திற்கும் யாழ் பத்திரிகைகளுக்கும் படைத்தரப்பினர் அச்சுறுத்திய நிலையில் பத்திரிகைகள் குறித்த அச்சுறுத்தல் கடிதத்தை வெளியிட்டன.