மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டது, கட்சி மக்களிடமிருந்து விலகிவிட்டது என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறைந்துவிட்டதற்கு அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே சாட்சியம் என்றார் அவர்.
நம் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது என்பதை இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பரசத் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்று கட்சிப் பத்திரிகை ஜனசக்தியில் கூறப்பட்டுள்ளது.
இழந்த செல்வாக்கை மீட்கவும் மக்களுக்கும் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கவும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார்.
ஏழைகளில் ஒரு பகுதியினர், நாம் முன்பு போல அவர்களது நலனில் அக்கறை செலுத்துவது இல்லை என்று கருதுகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் பெயரைக் குறிப்பிடாமல் அந்தக் கட்சி மாவோயிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றை வளர்த்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
மக்களிடம் செல்வாக்கு குறைந்துவிட்டது என்று கட்சித் தலைவர் வெளிப்படையாக கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கம்யூனிஸ்டுகளின் இரும்புக் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி தோல்வியடைந்தது. திரிணமூல் காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு செல்வாக்குடன் திகழ்ந்த மார்க்சிஸ்ட் முதல் முறையாக சரிவைச் சந்தித்தது.
சிங்கூர், நந்திக்கிராமத்தில் டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க விளை நிலைங்களை கட்டாயமாக கையகப்படுத்தியது மாநில அரசு. இதை எதிர்த்த விவசாயிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டனர். விளை நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு சரிந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்குள் இழந்த செல்வாக்கை மீட்டு கட்சியை வலுப்படுத்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் நடவடிக்கையாகத்தான் கட்சிக் கூட்டத்தில் புத்ததேவ் இவ்வாறு வெளிப்படையாகப் பேசி மக்களுக்கு நெருக்கமாகச் செல்ல அவர் வேண்டிக்கொண்டார்.