இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், சில நாள்களுக்கு முன்னால், ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவருடன் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற 12 பேரும் அவ்விபத்தில் இறந்து போனார்கள்.
அதிர்ச்சியும் வேதனையும் நிறைந்த இச்செய்தி நாடு முழுவதும் துயரத்தைக் கொண்டுவந்துள்ளது. இது இயற்கையான விபத்துதானா அல்லது வேறு சதி வேலைகள் ஏதேனும் உள்ளனவா என்று ஆராய, ஒன்றிய அரசு ஒரு குழுவையும் நியமித்துள்ளது.
இந்நிலையில், வழக்கம்போல் எந்த ஆதாரமும் இல்லாமல், தன் மனம் போன போக்கில் வலையொளியில் பேசக்கூடிய மாரிதாஸ் என்னும் ஒரு நபர், தன் ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியில் தமிழ்நாடு காஷ்மீராக மாறிக்கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அதாவது, பிபின் ராவத் மரணத்திற்குத் திமுக அரசு காரணம் என்பதுபோல் அந்தப் பதிவு அமைந்துள்ளது.
அந்த மாரிதாஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதூறாகப் பேசுபவர்களின் மீது கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் அண்மையில் பார்க்கிறோம். கிஷோர் கே சாமி, கல்யாணராமன், சாட்டை முருகன், தட்க்ஷிணாமூர்த்தி ஆகிய நபர்களின் வரிசையில் இப்போது இந்த மாரிதாஸ். இவர்கள் எல்லோருமே பொறுப்பற்றும், ஆதாரமற்றும் பேசும் குணமுடையவர்கள். கண்ணியக் குறைவாகப் பேசுவதிலும், எழுதுவதிலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர்கள்!
கைதாகும் வரையில் வீராதி வீரர்களைப் போல் “முழக்கமிடும்” இவர்கள், கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டவுடன், “அன்று எனக்கு காய்ச்சல், உடம்பு சரியில்லை, அந்த உஷ்ணத்தில் உளறி விட்டேன்” என்பதாக, சாவர்க்கர் பாணியில் மனு கொடுப்பார்கள்!
மாரிதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு, இரண்டே இரண்டு பேர் அதனைக் கண்டித்துப் பொங்கி எழுந்துள்ளனர். ஒருவர் பாஜக அண்ணாமலை. இன்னொருவர், பாஜகவின் புதிய கிளைச் செயலாளர் சீமான்.
சீமானுடன் சேர்ந்து பயணிக்கும் இயக்குனர் களஞ்சியம் கூட இதில் சற்றுப் பின்வாங்கிவிட்டார். அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டது சரிதான் என்றும், குண்டர் சட்டத்திலேயே அவரை அடைக்கலாம் என்றும் கூறியுள்ளார். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்கும் அளவுக்குத் தான் அவ்வளவு மோசமான வலதுசாரி இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். (‘கொஞ்சூண்டு’ வலதுசாரி போலிருக்கிறது).
சாணக்கியா பாண்டே கொஞ்சம் பூசி மெழுகி, வழக்குப் போட்டிருக்கலாம், கைது செய்ய வேண்டியதில்லை என்கிறார். .
அண்ணாமலை ஆர்ப்பரிப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சீமான் தன் வேடத்தை இப்படிச் சட்டென்று கலைத்துக் கொண்டதுதான் சற்று வியப்பாக உள்ளது. ‘ஜெய்பீம்’ பிரச்சினையிலும், அன்புமணியின் வலியையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று சீமான் ‘அருளாசி’ வழங்கினார்.
சீமான் கருத்துரிமை பற்றிக் கவலைப்படுகிறார். தான் ஆட்சிக்கு வந்ததும் (!!!), எதிர்க்கருத்து சொல்பவர்களைப் பச்சை மட்டையால் அடித்துத் தோலை உரித்தது விடுவேன் என்று கூறும் ஜனநாயகவாதியான சீமான், கருத்துரிமைக்காக இப்போது கவலைப்படுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுவாக மிக மென்மையாக நடந்து கொள்கிறார். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எல்லோருக்குமான அரசு இது என்பதை அடிக்கடி தன் சொல்லாலும், செயலாலும் நினைவுபடுத்துகிறார். எனவே அவர் மென்மையான மனிதராகத்தான் எப்போதும் நடந்து கொள்வார், நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.
வேறு சிலர் சொல்கின்றனர் – ரஷ்ய மொழியில் ஸ்டாலின் என்ற சொல்லுக்கு ‘இரும்பு மனிதன்’ என்று பொருளாம்!