மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், 05.08.2009
இலங்கை ஜனாதிபதி,
மான்புமிகு ஜனாதிபதி அவர்களே!
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகன்.
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். நான் அவருடன் நெருங்கி பழகாது போனாலும் அவர் யாழ் மாவட்டத்தில் பல உதவி அரசாங்க பிரிவுகளில் செயலாளராக கடமையாற்றி மக்களால் நன்கு மதிக்கப்பட்டு விளங்கியவர். அவர் கடமை உணர்ச்சி கொண்ட கடும் உழைப்பாளி.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் கடமையாற்றிய அரச ஊழியர்களை அவமதித்து நடத்துவதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையாற்றிய ஒரு அரச ஊழியனும் தானாக விரும்பி அங்கே சேவை செய்யவில்லை. பல அரச ஊழியர்கள் மிகவும் செல்வாக்கு பெற்ற பிரமுகர்களை பிடித்து தமது இடமாற்றத்தை நிறுத்தியுள்ளனர். அம் முயற்சியில் தோல்வி கண்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்த இடங்களில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் தத்தம் தலைமை அலுவலகங்களுக்கும் வீடுகளுக்கும் இஷ்டம்போல் சென்று வந்தனர். இப்போது அவர்கள் குற்றவாளிகள் போல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. முள்ளிவாய்க்காலில் பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்றிய அந்த மூன்று வைத்தியர்களை நடத்திய முறை சரியென என்னால் இப்போதும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கடமையாற்றியவர்கள் எந்த நிலையில் இருந்தார்களோ அதையொத்த நிலையிலேதான் இன்றும் அவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தாளத்துக்கு அன்று அவர்கள் ஆடினார்கள். அன்று விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஓர் அரச ஊழியர் தனது இடமாற்றத்தை ஆட்சேபித்திருந்தால் அரசு என்ன செய்திருக்கும். அரசு அவர்களுக்கு உதவவில்லை.
ஜனாதிபதி அவர்களே! தயவு செய்து எனது ஆலோசனையை ஏற்று அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என கூற வேண்டாம். ஏனெனில் அவர்கள் ஏதாவது தப்பு செய்திருந்தாலும் அது விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே செய்திருப்பர் என்பது மட்டுமல்லாமல் பயத்தினாலும் செய்திருப்பர். விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய அவர்கள் எ;ன்ன குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் அதற்குப் பொறுப்பாகமாட்டார்கள். அவர்களை அரசு குற்றவாளிகளாக இல்லாமல் ஏதாவது விடயங்கள் பற்றி அறிய அல்ல சில விபரங்களை அறிய கூப்பிடுவது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. இந்த மாதிரியான நிலைமை நீடித்தால் அரசு தனது மதிப்பை விரைவில் இழந்து விடும். ஆகவே அரச அதிபர் திரு வேதநாயகனை விடுதலை செய்துவிட்டு தேவைக்கேற்ப விசாரியுங்கள். வன்னியில் உள்ள அரச அதிகாரிகள் கடும் குற்றவாளிகள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம். நல்ல பல வேலைகளை மக்களுக்கு பல காலம் சேவைசெய்ய உபயோகிக்கக்கூடிய ஓர் சிறந்த அரசு ஊழியரை நோகடிக்க வேண்டாம்.
நன்றி
வீ.ஆனந்தசங்கரி – தலைவர்- த.வி.கூ