ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட 18 வெளிநாட்டு விஜயங்களுக்கு 200 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை ஆளும் கட்சியின் பிரதம கொரடா, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த விபரங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
2007ஆம் ஆண்டு கரேபியன் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியைப் பார்க்கச் சென்ற செலவுகளும் இதற்குள் அடங்குவதாகவும், ஜனாதிபதியுடன் கூடச் சென்ற 19 பேருக்கான செலவுகள் 5.4 மில்லியன் ரூபாய்களும் இதில் இடங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 63வது அமர்வில் கலந்துகொள்வதற்காக 47 மில்லியன் ரூபா செலவானதாகவும், இதில் 23 அதிகாரிகள் இணைந்துகொண்டிருந்ததால் இந்தச் செலவே மிகவும் அதிகமான செலவெனவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்வைத்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் மூலம் பெறப்பட்ட நிதியுதவிகள் பற்றிய விபரங்களையும் அவர் பராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.