ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றியீட்டிள்ளமை குறித்து நோர்வே சுற்றாடல் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் நோர்வேயும் இலங்கையும் நீண்டகால இருதரப்பு உறவுகளைக் கொண்டவை. இலங்கையுடன் அபிவிருத்தி மற்றும் நீடித்த அமைதி என்பவற்றை முன்னேற்றும் வகையில், எமது ஒத்துழைப்பு தொடரும்.
தேர்தல் அமைதியாக நடந்தமைக் குறித்து நாம் கவனத்தில் கொண்டோம். இருந்தபோதிலும் அவ்வப்போது இடம்பெற்ற வன்முறைகள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையிலான சம்பவங்கள் தொடர்பில் நாம் கவலையடைந்துள்ளோம்.
எனவே, இலங்கையின் ஜனநாயக பாரம்பரியங்களுக்கு ஏற்ப இவ்வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாம் கோருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தமது செய்தியில், தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவான முடிவு கிட்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த சரித்திர ரீதியான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
தமிழ் மக்கள் உட்பட சகல சிறுபான்மை சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அரசியல் தீர்வு ஒன்று அவசியம். அதுவே, இலங்கையில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நோர்வே பிரதமரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.