மஹிந்த சிந்தனை மக்களின் மரண சிந்தனையாக மாறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கிப் பயணிப்பதால் தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களுக்கு பாற்சோற்றைக்கூட உண்ணமுடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது” என்று ஐக்கிய சோசலிஷக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்கு மகாத்மா காந்தி கையாண்ட வழிமுறைகளை எமது நாட்டு மக்கள் பின்பற்றிக் கொடுங்கோல் ஆட்சி புரியும் இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிக்கவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
அரசு மணக்கோலம் தரிப்பதற்காக நாட்டு மக்களை அலங்கோலப்படுத்துகின்றது. வாய் திறந்தால் சுட்டுப்படுகொலை செய்கின்றது என்றும் அவர் கூறினார்.
சிறிதுங்க ஜயசூரிய மேலும் கூறியவை வருமாறு:
எரிபொருட்களின் விலையை என்றுமில்லாதவாறு அதிகரித்து ஆசியாவில் சாதனை படைத்துள்ள அரசு, இன்னும் ஓரிரு தினங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து சாதனை படைக்கப்போகின்றது.
நாட்டின் பொருளாதாரம் சர்வதேசத்தின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே பயணிக்கின்றது. அம்பாந்தோட்டை மாவட்டத்தை இலக்குவைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
காட்டுப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யத்தான் வேண்டும். ஆனால், பயன் எதுவும் ஏற்படவில்லையே! துறைமுகம் அமைத்தனர். ஆனால், கப்பல்கள் வருவதில்லை. மைதானம் அமைத்தனர், விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுவதில்லை. அப்படியானால் ஏன் அவ்வளவு பணத்தை அள்ளி வீசி இவற்றை அமைத்தனர்?
ஜனாதிபதி தனது மகனைத் திருப்திப்படுத்துவதற்காக இரவோடிரவாகத் தரைகளில் கார்ப் பந்தயம் நடத்துகின்றார். தங்களது பிள்ளைகள் வேலை வாய்ப்பின்றித் தவிப்பதையிட்டு எத்தனை பெற்றோர் இன்று கண்ணீர் வடிக்கின்றனர் என்பதை அரசு சிந்திக்காமல் இருப்பது ஏன்?
ஜனாதிபதியினதும் அமைச்சர்களினதும் குடும்ப பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தால் போதும் என்ற போக்கிலேயே இந்த அரசு செயற்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரம் இந்நிலையில் பயணிக்குமானால் தமிழ், சிங்கள புத்தாண்டைக்கூடக் கொண்டாட முடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது. பாற்சோறு தயாரித்து உண்ணக்கூடிய நிலை கூட இருக்குமோ என்பது சந்தேகமாகவே உள்ளது.
மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடினால் சுட்டுப்படுகொலைசெய்து மிரட்டுகின்றனர். அப்படியானால், மஹிந்த சிந்தனை மரண சிந்தனையாக மாறிவிட்டதா?
மக்களை அடக்கி, ஒடுக்கி ஆளமுனையும் இந்த ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு விரட்டியடிக்கவேண்டும். அதற்காக வடக்கு, தெற்கு மக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்கு காந்தியுடன் இணைந்து மக்கள் போராடியதுபோல் இங்குள்ளவர்களும் போராடவேண்டும் என்றார்.