மஹிந்த சிந்தனை அரசாங்கம் அடிப்படையில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை முன்னெடுத்துவரும் ஒரு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்கம் என்ற உண்மையை கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஒரு இளம் ஊழியர் கொல்லப்படவும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் காயங்கள், படுகாயங்கள் படவும் காரணமாக அமைந்த மிருகத்தனமான பொலீஸ் தாக்குதலை புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை தொழிலாளர்கள் ஊழியர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ள தனியார் ஓய்வூதிய உத்தேச சட்ட மூலத்தை உடன் வாபஸ் வாங்க வேண்டும் எனவும் கட்சி வற்புறுத்துகின்றது.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மகிந்த சிந்தனை அரசாங்கம் எவ்வளவிற்கு தொழிலாளர் ஆதரவு அரசாங்கம் என வேடமிட்டுக் கொண்டாலும் அதற்கு பாராளுமன்ற இடதுசாரிகள் பதவிகளுக்காகப் பக்கவாத்தியங்கள் வாசித்தாலும் அதன் மக்கள் விரோத தொழிலாளர் விரோத அடக்கு முறை ஆட்சி அதிகாரப் போக்கை மறைத்து விடமுடியாது என்பதையே கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான பொலீஸ் தாக்குதல் வெளிக் காட்டியுள்ளன. இன்றைய ஜனாதிபதி அன்று தொழில் அமைச்சராக இருந்த வேளை நிறைவேற்ற முற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவுதானும் சாதகமானதாக இருந்த தொழிலாளர் சாசனம் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவப் பெரு நிறுவனங்களினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கடும் அழுத்தங்களால் கைவிடப்பட்டது. இன்று நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து வரும் ஜனாதிபதியால் அது பற்றி எதுவுமே பேச முடியவில்லை. அதே வேளை சர்வதேச நாணய நிதியத்தினது ஆலோசனையின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கும் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து அவர்களது சேமிப்பை கொள்ளையிடவும் வழி வகுக்கும் தனியார் துறையினருக்கான ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டுவர முன் நிற்பது அதன் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டையும் அந்நிய ஏகாதிபத்திய சார்பையும் தான் வெளிப்படுத்துகிறது. பொருட்களின் மீதான விலை அதிகரிப்பையும், வாழ்க்கைச் செலவு உயர்வையும் திசை திருப்புவதற்கு அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பயங்கரவாதமாகக் காட்டியதுடன் வடக்கு கிழக்கு மக்கள் மீதான ஒடுக்குமுறையை சிங்கள் உழைக்கும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தியும் வந்தது.
ஆனால் அதே ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும் ஆயுதப்படைகளைப் பயன்படுத்தியும் சிங்கள உழைக்கும் மக்களையும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் அப்பட்டமாகவே மறுத்து அடக்கும் போக்கு இன்று வெளிப்பாடடைந்து வேகம் பெற்று வருவதையே கட்டுநாயக்க தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. கட்டுநாயக்க சுதந்திர வலைய ஊழியர்களும் ஏனைய தனியார் துறைத் தொழிலாளர்களும் காட்டிவரும் எதிர்ப்பையும் உறுதியான போராட்ட நிலைப்பாட்டையும் எமது கட்சி முழுமையாக ஆதரித்து நிற்கிறது. எவ்வளவிற்கு பௌத்த தர்மம் பற்றிப் பேசினாலும் சிங்கள இனமொழி மேன்மை பற்றி எடுத்துரைத்தாலும் ஆளும் வர்க்க அரசாங்கங்கள் வர்க்க நிலையில் முதலாளித்துவ அடிப்படையையும், ஏகாதிபத்திய அரவணைப்பையும் கொண்டதேயாகும் கொண்டதேயாகும். இதனை பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்கள் நடைமுறை அனுபவங்கள் மூலம் உணர்ந்து நாட்டின் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களோடும் தொழிலாளர்களோடும் ஐக்கியப்பட்டு பரஸ்பரம் உரிமைகளை வென்றெடுக்க முன்வரல் வேண்டும் என்பது அவசியமானதாகும் என அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
நம்ம இடதுசாரி வழி வந்தவர்கள் ரொம்ப நல்லவர்கள்.காரியம். எதுவும் செய்ய மாட்டார்கள்; அறிக்கை மழை பொழிவார்கள் அல்லது கடிதம் வரைவார்கள். (ஆனந்தசங்கரி போல.)
நினைவூட்டல்
1) யுத்தம் முடிவடைந்து இரண்டாவது ஆண்டை நெருங்கியபோதும் அந்த அவலங்கள் தாக்கங்களிலிருந்து மக்கள் முற்றாக மீளவில்லை. இந்நிலையில் இன இனமுரண்பாடும் ஒடுக்குமுறையும்; நீடிக்கின்றன. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காலத்தை நீட்டாது முன்வைப்பதை வற்புறுத்துகிறோம். அத்தகைய தீர்வு சுயநிர்ணய உரிமை அடிப்படையில், ஜக்கியப்பட்ட இலங்கையில் பூரண சுயாட்சி உடையதாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
2) மீள் குடியேற்றம், புனரமைப்பு புனர்வாழ்வு என்பன வெறும் பெயரளவில் அன்றி மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் எவ்வித தலையீடும் அச்சுறுத்தலும் நெருக்கடிகளும் இன்றி சுதந்திரமாகவும், இயல்பாகவும் வாழ்வதற்கு ஏற்ப இயல்புச் சூழலை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.
3) வலி வடக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் இருந்து வரும் உயர்பாதுகாப்பு வலயபகுதிகளில் மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
4) அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்படுவதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.
5) ஆரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதுடன் காணாமற்போனோர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
6) இனம் தெரியாதோர் என்னும் பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொலைகள் கொள்ளைகள் ஆட்கடத்தல்கள் நிறுத்தப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
7) ஜனநாயகம், இயல்பு வாழ்வு என்பன மீண்டும் தோற்றுவிக்கப்பட வேண்டும். முழுமையான சிவில் நிர்வாகம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
8) அடிப்படை ஜனநாயக – மனித உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், ஊடக, கருத்துச் சுதந்திரம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
9) பொருட்களின் விலையுயர்வு தடுத்து நிறுத்தப்படுவதுடன் வாழ்க்கைச் செலவின் உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சம்பள உயர்வு சகல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்.
10) விவாசயிகள் அன்றாடத் தொழிலளர்கள் மீனவர்கள் தத்தமது தொழில்களை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் முன்னெடுப்பதற்கு ஏற்ற இயல்புச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
11) ஏகாதிபத்திய உலகமய திறந்த பொருளாதாரத்தின் விளைபயனான நுகர்வுக் காலாசாரத்தின் நச்சுத்தனமான பாதிப்புக்களுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்து அணிதிரட்ட வேண்டும்.
12) இலங்கையின் இறைமைக்கும், இனங்களின் ஜக்கியத்துக்கும் வேட்டு வைத்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளின் ஊடுருவல்களுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.
13) இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக உழகை;கும் வர்க்கத்தின் நலன்களுக்கான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் அணிதிரட்டி ஜக்கியம், சமத்துவம், சுதந்திரம், சுபீட்சமுள்ள புதிய இலங்கையைக் கட்டி எழுப்புவோம்.
14) உலகின் அடக்கி ஒடுக்கபட்ட நாடுகளினதும் மக்களினதும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரட்டங்களுடன் ஒன்றிணைந்து முன்செல்வோம்.