அண்மையில் பண்டாரவளை பிரதேசத்தில் 07 பேர்ச் அளவான காணி உறுதியுடன் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முழு மலையக மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்குவதற்கான தொடக்கமாகவும் நோக்கப்படுகிறது. எனினும் இந்த காணி உறுதி முறையாக வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள உறுதியிலே பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. வழங்கப்பட்டுள்ள உறுதியிலே காணியை யார் வழங்குகிறார், எந்த அரச நிறுவனத்துக்கு சொந்தமான காணி வழங்கப்படுகிறது, எந்த சட்டத்தின் எந்த அதிகாரத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்பவை தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. உறுதியிலே உள்ள சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையில் வித்தியாசங்கள்; காணப்படுகின்றன.
சிங்கள மொழியிலே ‘காணியின் உடைமைய’ வழங்குவதாக உள்ளது. எனினும் தமிழ் மொழியிலே ‘சட்டப்படி காணி உரித்து’ வழங்குவதாக உள்ளது. இவ்வாறாக சட்டரீதியாக குறைபாடுளுடன் உறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களுக்கு காணி உறுதி என்பது மீண்டும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைக்கு மட்டுப்படுத்தப்படுவதாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 90களில் இரண்டு முறை தற்போதைய பிரதமர். ரணில் விக்கிரமிசிங்க தோட்ட லயன் அறைகள் சொந்தமாக்கப்படுவதாக கூறி உறுதி என்ற பெயரில் ஆவணங்களை வழங்கி இருந்தார். அது போலியான உறுதி என்பது பின்னர் அம்பலமானதையும் மக்கள் மறக்க கூடாது.
இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டு மே தினத்தில் தலையுரை ஆற்றிய பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா குறிப்பிட்டார். அவ்வுரையில் மேலும் குறிப்பிட்டப்பட்டதாவது;
மலையக மக்களின் காணி உரிமை உறுதி செய்ய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் தோட்டங்கள் பெற்றுள்ள இலாப அளவை வைத்து பார்க்கும் போது அவர்கள் ரூபா. 1000 நாட்சம்பளமாக வழங்கும் நிலையிலே இருக்கின்றனர். பேச்சுவார்த்தையின் பின்னர் பெறப்படும் சம்பள உயர்விற்கு மேலதிகமாக அரசாங்கம் அறிவித்துள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான 2500ஃஸ்ரீ சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இன்று ஆட்சியில் உள்ள மைத்திரி – ரணில் அரசாங்கம் மஹிந்த ஆட்சியில் இருந்து சில வேறுபாடுகளை கொண்டிருந்த போதும் இலங்கையில் தொடர்ந்து நவ தாராள, நவ காலனித்துவ பொருளாதார கொள்கையேயே நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது எமது நாட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் உழைப்பு உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து வெளிநாட்டு கம்பனிகள் சுரண்டுவதற்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்கள், விசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உழைப்புகேற்ற ஊதியம் இன்றி பொருளாதார சுமைக்கும், முழு வாழ்கையையும் உழைப்பத்திற்கே செலவு செய்ய வேண்டிய கொடுமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
அதில் இருந்து மீள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் உழைப்பை விடுதலை செய்து உழைப்பின் சேசலிசத்தை உருவாக்க வேண்டும். இதற்கு இலங்கையின் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு அணித்திரள்வதற்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயலாற்றும் அமைப்புகளும் ஐக்கியப்பட்ட போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த மே தினத்தில் திடசங்கட்பம் கொள்ள வேண்டும் என்றார்.
மக்கள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உரையாற்றிய அதன் தலைவர் எஸ். மோகன் இன்றை நிலையில் ஆசிரியர்கள் தமக்கான உரிமையை கல்விக்கான உரிமை என்ற அம்சத்தில் இருந்து விளங்கிக் கொண்டு போராடும் போதே நிலைநாட்டிக் கொள்ள முடியும். இன்று கல்வி தனியார் மயப்படுத்தப்படும் சூழ்நிலையில் ஆசிரியர்கள் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய முன்னணி படையாக மாற வேண்டும் என்றார்.
மக்கள் பன்பாட்டுக் கழக உறுப்பினர் சு. விஜயகுமார் உரையாற்றும் போது அன்று தொழிலாளர்கள் பெற்றுக் கொடுத்த 08 மணித்தியால வேலை நேரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு இன்று தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 08 மணித்தியால வேலை, 08 ஓய்வு 08 உறக்கம் என்ற தொழிலாளர்களின் அன்றை முழக்கம் இன்றும் உடல் உழைப்பை செய்யும் கூழி தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி மூளை உழைப்பை செய்யும் தொழிலாளர்களும் செல்லுபடியானது என்றார்.
இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பார் டபில்யூ. சோமரட்ன தனதுரையில் மைத்திரி அரசாங்கம் நவதாராள பொருளாதார கொள்கைகளிலேயே பயணிக்கின்றது. மாற்று பாதையை மைத்திரியிடம் இருந்து எதிர்பாரக்கவும் முடியாது. மாற்று பாதை தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியில்தான் உள்ளது என்றார்.
மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.நெல்சன் மோகன்ராஜ் உரையாற்றும் போது கல்வி இன்று விற்பனை பண்டமாக மாற்றப்பட்டுள்ளது. அரச பாடசாலைகளிலேயே பெற்றோர்களிடம் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டணம் பெற்றுவது சட்டரீதியாக்கப்பட்டுள்ளது. கல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை தோன்றுவதற்கான சூழல் திட்டமிட்டவகையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை உணர்ந்து மக்களும் ஆசிரியர்களும் செயற்பட வேண்டியுள்ளது என்றார்.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தோட்ட கமிட்டிகளை பிரதிநிதித்துப்படுத்தி உரையாற்றிய திருமதி. தமிழ்ச்செல்வி, திருமதி. அமுதகௌரி ஆகியோர் தோட்டங்களில் தோட்ட நிர்வாகம் முறைகேடாக இருப்பதனை சுட்டிக்காட்டினர். 50 தொழிலாளர்கள் இருக்கும் தோட்டங்களில் பெரிய துரை, சின்ன துரை, ஏனைய உத்தியோகத்தர்கள் என பலர் இருக்கின்றனர். அவர்களின் பங்களாவில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் வழங்கப்படுகின்றன. தோட்டங்கள் அழிவடைவதற்கு இவ்வாறு முகாமை செய்யப்படுவது காரணமாக இருக்கிறது என்றனர்.
தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வெகுமக்கள் கலந்துகொண்ட இக்கூட்டு மே தினத்தில் மக்கள் பண்பாட்டுக் கழக உறுப்பினர்களினால் தொழிலாளர் வர்க்க எழுச்சி பாடல்கள் இசைக்கப்பட்டன.