தமிழ் மொழிப்பற்று என்பதை அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கான ஓர் விழைவாகவே பயன்படுத்துவதைத் தமிழக அரசியலை கூர்ந்து கவனிப்போருக்குப் புரியும். இன உணர்வும் அவ்வாறே. தமிழ் மொழியின் தொன்மை சார்ந்தும் அதன் நுட்பம் சார்ந்தும் மானுடம் பயனுற வேண்டியவை தமிழ் மொழியினிடத்து நிறைய உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் தமிழ் மொழியை விதந்தோதும் மேடைத் தொனியுடனேயே முடிந்து போகிறது. அதற்கு மேல் அதை வளர்த்தெடுக்கவும் இனத்துக்கான ஒரு சமூகப் பயன்பாட்டு வழியாகவும் மாற்றத் தெரியாத சமூகமாகவும் தமிழ்ச் சமூகம் விளங்கி வருவது வேதனைக்குரியது. மருத்துவம், தத்துவம், பண்பாடு எனப் பல துறைகளிலும் காலத்தினோடும் மனிதப் பரிணாமத்தோடும் தொடர்ந்து பயணப்பட்டோர் நம் மூதாதையர். ஆனால் அவை எல்லாம் இன்று அரசியல் தளங்களில் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.
மலையகத் தமிழர்களின் வரலாற்றை அலசுந்தோறும் தவறுகள் எல்லாம் தமிழனுடையவை என்றே தோன்றுகிறது. சிங்களவர்களோ ஆங்கிலேயர்களோ கையாண்ட அரசியல் நிதானங்களையும் ஒற்றுமையையும் நாம் கடைபிடிக்கவில்லை என்பதே உண்மை. இலங்கையின் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற இன வேறுபாடு ஆங்கிலேயர்கள் நுழைந்த பதினெட்டாம் நூற்றாண்டில் கூட தெள்ளத் தெளிவாக இருந்தது. இரு இனங்களுக்கும் இடையே பெரிய அளவில் பகைமை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லையெனினும் அவர்கள் தனித்தனியே தமது நிர்வாகங்களைக் கவனித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய மலைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் பெரிய அளவில் பொருளாதாரத்தைத் திரட்ட விரும்பிய போது மண்ணில், மலையில் நின்று உழைப்பவர்களாக இந்த இரு இனத்தினருமே அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. காரணம் சிங்களவர்கள் உழைப்பையே அறியாதவர்களாக இருந்தனர்; தமிழர்கள் நில உடைமையாளர்களாக இருந்தனர். இந்தியாவும் இலங்கையும் ஆங்கிலேயர் கைவசமே இருந்ததாலும், 1800களில் தமிழகத்தில் கடுமையான பஞ்சம் நிலவி வந்ததாலும் தமிழகத்திலிருந்து கூலிகளாக மக்களை அழைத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. சிங்களவர்களும் தமிழர்களும் இந்த விஷயத்தில் ஆங்கிலேயர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கின்றனர் என்றே கூற வேண்டும். ஆங்கிலேயர்களின் எல்லாத் துறைகளிலும் முக்கியமான பொறுப்புகளை ஏற்பதில் கவனமாக இருந்த சிங்களர்களும் ஆதிக்கச் சாதித் தமிழர்களும் ஆங்கிலேயர்கள் தமது அரசியல் சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டதையும் உணரவில்லை.
இந்தியாவில் போலவே, சிறு வணிகர்களாக வந்த பிரிட்டானியர்கள் இலங்கையினையும் தமது நிர்வாக வசதிகளுக்காக ஒற்றைப் புவியியல் பரப்பாக மாற்றிக்கொண்டனர். இலங்கையில் ஆங்கிலேயர்கள் கரையோரங்களோடு மலையகத்தையும் கைப்பற்றிய பின்பு தான் இலங்கையை ஐந்து மாகாணங்களாகப் பிரித்தனர். இத்தகைய அரசியல் வரைபடம் தான் இன்றும் நிறைய கொடுங்கோன்மைகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே இலங்கையில் நிலவி வந்த பண்பாட்டு அரசியல் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை. சிங்களவர் ஆண்ட பகுதிகளும் தமிழர்கள் ஆண்ட பகுதிகளும் தனித்தனியே இருந்தாலும் அவர்களுக்கிடையே அவர்கள் ஆட்சி குறித்த சில ஒப்பந்தங்களும், உறவு பேணல்களும் இருந்தமை ஆங்கிலேய ஆதிக்கத்தால் குலைந்து போயின.
அப்பொழுது எழுந்த அரசியல் சிக்கல்களும் குழப்பங்களும் இன்றும் நேர்செய்ய முடியாதனவாக இருக்கின்றன. குறிப்பாக மலையகத் தமிழர்களின் உரிமைகள் எல்லா அரசியல் தளங்களிலும் புறந்தள்ளப் பட்டவையாகவே இருந்து வருவதை நாம் புரிந்துகொள்வது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றே எண்னுகிறேன். அவர்களின் நிலைமை அகதிகளை விட மோசமாகவும் காலங்காலமாய் உழைப்பை மட்டுமே அவர்கள் வாழ்க்கையிலிருந்து உறிஞ்சிக் கொள்ளக்கூடியதாகவுமே இருக்கின்றது. இந்த அவல நிலையைப் புரிந்து கொள்வதே, நிறைய வகைகளில் ஓர் ஒருமித்த விடுதலைக்கான சாத்தியத்தை ஏற்படுத்துவதற்குப் போதுமானது என்று எண்ணலாம்.
130 ஆண்டுகளாக அதாவது 1796 முதல் 1930 வரையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து பெண்களையும் ஆண்களையும் அற்றைக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் சென்றிருக்கின்றனர் ஆங்கிலேயர். கிட்டத்தட்ட பத்து இலட்சத்திற்கும் மேலானோர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் மூன்று இலட்சம் பேர் பயணத்திலேயே இறந்தனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பொதுவாகவே ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருந்தனர். அதாவது அவர்கள் எல்லோருமே சமூகத்தின் சாதிப் படி நிலையில் கீழ் நிலையைச் சேர்ந்த சாதியினர். பறையர், பள்ளர், மீனவர், முக்குவர், முக்குலத்தோர், நாடார், சாணார், வன்னியர், நத்தமர், மருத்துவர் போன்ற அன்றும் நிலவி வந்த சாதி அதிகாரத்தால் சமூக அழுத்தத்திற்கு உள்ளானோர். தமிழகத்தில் அவர்கள் வாழ்க்கையைத் தொடர்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்கள் தாம் இன்றும் இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மண்ணையும் பொருளாதாரத்தையும் திருத்த, வளம் பெருக்க கடுமையான உழைப்பை மேற்கொண்ட மக்கள் இன்றும் அந்த மண்ணில் உரிமையற்றவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்ததால் தாம் அற்றைக்கூலிகளாக மாறினர். இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கச் சாதியினராக இருந்ததால் தான் மலையகத்தினரின் குடியுரிமை என்பது ஒரு பெருத்த அரசியலாக உருவெடுக்கவே இல்லை. இம்மலையகத்தினர் ஆதிக்கச் சமூகத்தினராக இருந்திருந்தால் இத்தகைய அற்றைக்கூலிகளாகவோ குடியுரிமை அற்றவர்களாகவோ வாழும் நிலை எழுந்திருக்காது.
இன்றைய இலங்கைத் தமிழர்கள் மக்கள் தொகை, சிங்களவரின் மக்கள் தொகைக்கு இணையானது. அதாவது 75 இலட்சம் தமிழ் மக்கள். இதில் மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேர். தமிழ் முஸ்லீம்கள் 15 இலட்சம் பேர். இந்நிலையில் தமிழினப் போராட்டம் என்பது மலையகத்தமிழரின் பங்கெடுப்பையும் தமிழ் முஸ்லீம்களின் பங்கெடுப்பையும் கருத்தில் கொள்ளாது வீர்யம் பெற முடியாது. இன்றைய நாளில் ஈழப் போராட்டம் என்பது உலக அளவில் பேசப்படும் ஓர் அரசியல் பொருளாய் மாறியிருப்பதற்குக் காரணம் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் இனத்தவர், தமிழர் என்னும் இன உணர்வால் பிணைக்கப் பட்டிருப்பதும் அதை அன்றாடப் பேசு பொருளாய் தம் வாழ்வில் மாற்றியிருப்பதும் தாம். வேறு வேறு தேசத்தவராக நாம் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வது இல்லை. அதே போல அந்நிலத்திலேயே அம்மண்ணின் எருவாகிப்போன மலையகத் தமிழரை அடையாளப் படுத்தப் போராடுவதும், அவர்களின் குடியுரிமை மற்றும் சமூக, அரசியல் உரிமைகளையும் நமது போராட்டத்தின் இலக்குகளாக இணைத்துக் கொள்வதும் மிக அவசியமாகும்.
இன்றும் காலனியாதிக்கத்தைக் காரணம் காட்டுவது பழைய அரசியல் பாணி என்றே தோன்றுகிறது. அதற்குப் பின்பு தமிழகத்தில் தோன்றிய தமிழ்த் தலைவர்களும் தமிழர் இயக்கங்களும், தமிழீழத்தில் தமிழர்களிடையே தோன்றிய தலைமைகளும் இயக்கங்களும் செய்த பிழைகள் ஏராளம் ஏராளம். காலந்தோறும் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழினத்தை அழிப்போருக்கே துணை போவோராக இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்க நேர்வதற்குக் காரணமும் நமது அரசியல் மடமையே. அரசியல் விழிப்புணர்வு என்பது எல்லா வகைகளிலும் நிகழ வேண்டும். என்றோ யாரோ செய்திட்ட அரசியல் தவறுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது என்று நாம் வாளாயிருந்து விட முடியாது. வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை, சில ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கைகளால் சரி செய்து விட முடியும். மொழி, பண்பாடு, வரலாறு, பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் வல்லமை மிக்கவர்களாகவும் ஒருங்கிணைந்தவர்களாகவும் தமிழர்கள் மாறுவதும் அவசியமாகும். நமது பழைய வரலாறு நீளமானதாகவும் புகழ் மிக்கதாகவும் இருக்கலாம். ஆனால் எதிர்கால வரலாற்றுக்கு நாம் கடினமாகப் போராட வேண்டியிருக்கிறது.
சகோதரி குட்டிரேவதி உங்களுடைய கட்டுரை ஆழமாக பலவிடயங்களை பேசுகிறது. இலங்கை மலையக மக்களை சுரண்டி ஓட்டாண்டி ஆக்கியதில் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் யாழ்ப்பாண உயர்குல வேளாள ஆங்கில மேட்டுக்குடியினரின் பங்கு கணிசமானது. மலையகத்தில் தோட்டங்களில் துரைமார்களாக மேற்பார்வையாளர்களாக அதிகாரிகளாக இந்த மேட்டுக்குடி ஆங்கிலம் படித்தவர்களே ஆடசி செய்தார்கள். ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சிக்கு உட்படுத்தியபோது நிர்வாக அலகுகளை நிர்வகிகப்பதற்கு ஆங்கிலம் படித்த கனவான்கள் தேவைப்பட்டார்கள். அந்நிய ஆங்கிலேருக்கு எதிரான தேசிவாதப்போக்கு சிங்கள மக்கள் மத்தியில் பரவியிருந்த காலம் அது. எனவே ஆங்கிலேருக்கு அடிமைச் சேவகம் செய்ய சிங்கள மக்கள் விருமபவில்லை. அந்த இடத்தைப்பிடிக்க அடிமைச் சேவகம் செய்ய மலையக மக்களை சுரண்ட ஓடொடிச் சென்றவர்கள் இந்த யாழ்ப்பாண மேட்டுக்குடி வர்க்கமே. தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் தலித்துக்களாக இருந்தமையால் இந்த மேட்டுக்குடிவர்க்கம் மிகவும் கொடுமையான புறக்கணிப்புக்களை இச் சமூகம் மீது நிகழ்த்தியது. இப் புறக்கணிப்பை ஆங்கிலேயருக்கும் மலையக மக்களை சுற்றியிருந்த சிங்கள மக்களுக்கும் கற்றுக் கொடுத்தது. மலைய மக்களின் இருண்ட பக்கங்களை உருவாக்கியதில் சிங்கள அரசைவிட அம் மக்களை ஆண்ட யாழ்ப்பாண மேட்டுக்குடி அதிகார வர்க்கமே முதன்மையானது. இதன் தொடாச்சியை இன்றும் மலையகத்தில் காணமுடியும்.
//வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளைஇ சில ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கைகளால் சரி செய்து விட முடியும். மொழிஇ பண்பாடுஇ வரலாறுஇ பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் வல்லமை மிக்கவர்களாகவும் ஒருங்கிணைந்தவர்களாகவும் தமிழர்கள் மாறுவதும் அவசியமாகும்.//
ஆருங்க எங்க ஈழத் தமிழரையா சொல்றீங்க. நடந்தமாதிரித்தான். அப்துல்கலாம் சொன்னதுபோல கனவு காணவேண்டியதுதான். புலி தொலைஞ்சதோடு நரிகளுக்கு கொண்டாட்டம். வவுனியாவில் நாலைந்து நரிகளின் ஆட்சி. இந்த நரிகளுக்குள் நுர்று குத்துவெட்டு .இப்படியே யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை மன்னார் என்று தொடருது. இதுக்குள்ள ஒருங்கிணைந்த தமிழர் என்ற உங்க நல்லாசை அப்துல்காலாமின் கனவுதான். ரேவதி அக்கா எங்களுக்கும் உங்க ஆசைதான். கொலை கொள்ளை ருசிகண்ட அரசியல்வாதிகள் இயக்கங்கள் இருக்கும்வரை இதெல்லாம் வெறும் கணவுதான்.
இலங்கைத் தமிழர் மக்கள் தொகை குறிப்பு தவறென நினைக்கிறேன். சரி பார்க்கவும்.
1981ம் ஆண்டு இலங்கையில் நடந்த சனத்தொகை இறுதிக்கணிப்பில் இலங்கை மொத்த சனத் தொகை 1 கோடியே 90 லட்சத்து 65ஆயிரம். இதில் சுமார் 35 லட்சம் “தமிழ்பேசும் மக்கள்”(முஸ்லீம் மலையக மக்கள் உள்ளடக்கம்.) இருப்பதாக கணிக்கப்படதாக நினைக்கிறேன். சரியான தகவல் தெரிந்த நண்பர்கள் சொல்லவும்.
குட்டி ரேவதியின் அக்கறை கவனத்திற்குரியது. எனினும் இனத் தொகைப் புள்ளிவிபரத்தில் அவர் தவறு விட்டிருக்கிறார். சாந்தன் சுட்டிக்காட்டியது சரியானது.
இரண்டாவதும் முக்கியமானதும் /ஆங்கிலேயர்களின் எல்லாத் துறைகளிலும் முக்கியமான பொறுப்புகளை ஏற்பதில் கவனமாக இருந்த சிங்களர்களும் ஆதிக்கச் சாதித் தமிழர்களும் ஆங்கிலேயர்கள் தமது அரசியல் சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டதையும் உணரவில்லை.
/ என்ற கூற்றில் சிங்களவரிகளிலும் ஆதிக்கச் சாதியினர் தான் ஆங்கிலேயா;களிடமிருந்து அதிகாரத்தைப் பங்கு கொண்டார்கள் என்பது ஒன்று.
இரண்டாவது இப்போதும் யாழ் வேளாளர் மலையகத் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர் என்று கூறுவது ஒரு வாய்ப்பாடே தவிர அறிவியல் சார்ந்தது அல்ல.
யாழ்.வேளாளருடைய ஆதிக்கப் பாத்திரத்தை மலையகத்திலிருந்து அகற்றி நீண்ட நாட்களாகிவிட்டது. இப்போது மலையகத்தின் அரசியல் தலைமையாயிருக்கிற தொண்டமானோ அவருடைய பேரன் தொண்டமானோ அல்லது சந்தரசேகரன் சதாசிவம் சுரேஷ் வகையறாக்களோ யாழ்ப்பாண வேளாள மரபினர் அல்லர். மலையகத்தின் ஆதிக கசக்திகள் யாழ் வேளாளரை யாழ் எதிர்ப்பு வாதத்தைப் பயன்படுத்தி அகற்றி நீண்ட நாட்களாகி விட்டது.
செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடைய பிரதிநதியாய் மாறி தசாப்தங்கள் பல கடந்து விட்டன. இன்றைய மலையக மக்களின் விடுதலைக்குத் தடையாக இருப்பது யாழ் வேளாள ஆதிக்கமல்ல. அது இன்று வேரிழந்து போய் நிற்கிறது. இன்று அம்மக்களின் விடுதலைக்கு மட்டுமல்ல சலுகைகளுக்குக் கூடத் தடையாக இருப்பது மலையகத்திலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் தான்.
தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் மலையக மக்களுடைய தனித:துவத்தை கொள்கையளவில் இரண்டு தசாப்தத்திற்கு முன்னரே அங்கீகரித்திருந்தன. இந்த அடிப்படைகளை புரிந்துகொண்டு பேசுவது பயன்மிக்கது.
இல்லாவிட்டால் வெறுமனே வாய்ப்பாட்டு வகையான விமர்சனங்களாகிவிடும் என்பதனைக் கவனத்தில் கொள்வது நல்லது.
தோழர்கள் கோசிமீன், மலர், சாந்தன் மற்றும் யாதவன் ஆகியோரின் கருத்துக்களுக்கான பதிலையே எனது அடுத்த பத்தியாக எழுதுவது என்று தீர்மானித்துள்ளேன். முதலில் இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். முதலாவதாக சாந்தன் மற்றும் யாதவன் இருவரின் கருத்துக்களுக்களுக்கும் எனது பதிலுரை. நான் குறிப்பிட்டிருந்த புள்ளி விவரத்தில் தவறு இருக்கலாம். நான் தகுந்த இடத்திலிருந்து தான் அவ்விவரத்தைச் சேகரித்தேன். என்றாலும் மன்னிக்கவும். ஆனால் புள்ளி விவரங்களில் ஒரு போதும் எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை. அதிலும் சம உரிமை பேசும் தளத்தில் புள்ளி விவரங்களை வைத்து அவற்றை அணுகும் முறை மிகுந்த எள்ளலுக்கு உரியவை. என்றாலும் நான் புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டு ஆரம்பித்ததால் அந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்கும் கடன் எனக்கு உண்டு. யாழ் வேளாளரின் சித்தாந்தம் சார்ந்தே இன்று வரையிலும் விடுதலைப் போராட்டம் தொடர்வதாக இருக்கிறது என்பதே எனது கருத்து. அல்லது அத்தகைய போராட்டச் சாய்வை தமது ஆதிக்கத்தினால் அவர்கள் உருவாக்கினர். சமூகத் தளத்தில் இருந்துதான் நான் அணுகியிருக்கிறேனே தவிர அரசியல் தலைமையை முன் வைத்து எனது கருத்தை எழுதவில்லை. கவனமாக நான் அவற்றை தவிர்த்தே வருகிறேன். காரணம் தொண்டைமான் போன்றோர்கள் தமது தனி மனித அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவே அரசியலை முன்னெடுப்பவர்கள்; இவர்களைப் போன்றோர் எல்லா விதமான சமூகங்களிலும் இருப்பார்கள். அவர்களின் அரசியல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலானவை. அவற்றை நாம் விமர்சிக்கப் போனால் நாம் நமது விடுதலையின் திசையிலிருந்து வழுவிப் போக நேரிடும். எனது வேலையும் பதிலும் அது இல்லை என்பதையும் அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து கொண்டிருக்கும் தமிழின ஒழிப்பை முற்றிலும் கண்டிப்பதோடு, இதைத் தடுக்கவும் இதிலிருந்து மீளவும் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று நாம் சிந்திக்கவும் வேண்டும் என்று நினைக்கிறேன். சாதி ஒடுக்குமுறையைப் பேசவரும் போதெல்லாம் இப்படிக் கொந்தளிப்பான குரல்கள் புற்றீசல்கள் போல வருவது தவிர்க்க முடியாது என்பதை என் எழுத்தின் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். தமிழ்த் தேசியம் என்பதும் இலங்கையில் நடந்து வரும் பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் என்பதும் சாதியின் அரசியலையும் சமூக நிலைகளையும் கணக்கில் கொள்ளாமல் சாத்தியமில்லை. இதற்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெரிய அளவில் சகிப்புத்தன்மை தேவைப் படுகிறது. தமிழகச் சூழலிலேயும் சாதியை ஒருமித்து எதிர்க்கும் சகிப்புத்தன்மையை நான் எதிர் கொண்டதில்லை. மேலும் நான் குறிப்பிடுவது யாழ் வேளாள எதிர்ப்பு வாதம் அல்ல. அதில் இன்றைய வேளாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அளவிலும் அல்லது மிகுதியான அளவிலும் பங்கு இல்லாமல் இருக்கலாம். கடந்த காலத்தில் இருந்த ஆதிக்கக் குழுவினரைத் தான் நான் குறிப்பிடுகிறேன். அவர்களின் செயல்பாடுகளுக்கு நாம் இன்று பொறுப்பேற்பது நமது கடனாக இருக்க வேண்டும் என்ற அளவில் தான் எனது வாதம். அப்படிப் பார்க்கப் போனால் அதில் தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதியினருக்குத் தான் நிறைய பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் இங்கிருந்து மலையகத்திற்கு ஆள்கள் கடத்தப்படுவதற்கு அப்பொழுது தமிழகத்தில் நிலவி வந்த சாதிய ஒடுக்கு முறையும் ஆங்கிலேயர்களோடு ஆதிக்கச் சாதியினர் செய்து கொண்ட சமரசங்களுமே ஆகும். அன்றைய வரலாறுக்கு நாம் பொறுப்பேற்க முடியாதே தவிர அன்றைய வரலாற்றை முன் வைத்து நிலவும் இன்றைய அரசியலுக்கு நாம் எல்லோரும் ஒருமித்து பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் இவ்விடயத்தில் சிங்களருக்கும் நமக்கும் வேறுபாடில்லாமல் போய்விடும்.
அன்புமிக்க கோசிமீன், உங்கள் புரிதலும் அணுகுமுறையும் ஆரோக்கியமானவை. தெளிவானவை. ஆனால், மேட்டுக் குடி வர்க்கத்தினர் என்ற வர்க்கம் சார்ந்த பதத்தை மட்டும் இனியும் நாம் பயன்படுத்தாமல் இருப்பது நம் அரசியல் புரிதலுக்கும் முன்னேற்றத்திற்கும் ஏதுவானதாக இருக்கும். ஒரு வர்க்கப் பிரச்சனையாகவே அணுகப்பட்டு வருவதன் மரபார்ந்த பார்வையின் அடையாளமே அச்சொல். மேலும் வழக்கத்தில் அச்சொல்லை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் வர்க்கச் சிந்தனைக்குச் சாதகமான சாத்தியங்களையே அது ஏற்படுத்துகிறது. இன்னும் இன்னும் அதை இறுகிப் போகச் செய்கிறது. வர்க்கச் சிந்தனையை இந்தியாவிலும் இலங்கையிலும் எல்லோரும் பொருள் கொள்ளும் அளவில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுவே சாதிய மறுப்புச் சிந்தனையைப் பேசுகையில் பல முரண்பாடுகளை உண்டாக்குகின்றது.
தமிழகத்தில் சாதீய அரசியலை விரித்துப் பேசும் போதெல்லாம் மூன்று வகையான அணியினர் கிளர்ந்தெழுகின்றனர். சாதியை மறுத்துப்பேசுவோர் ஓர் அணி. சாதியை ஒரு பேசுபொருளாக மாற்றக்கூடாது என்பதை பிடிவாதமாகக் கொண்டிருக்கும் ஆதிக்கச் சாதியினர் மற்றொரு அணி. (ஏனெனில் அவர்களின் இன்றைய வாழ்வும் நுகர்வும் சாதிய ஆதாயங்களினால் தாம்). பிறிதொரு அணியாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியவாதிகள். தமிழ்த் தேசியம் பேசும்போது சாதி ஒரு கருதுபொருளாக இருக்கக்கூடாது என்றும் அது ஓர் இனவரைவியல் விஷயமாகவே இருக்கவேண்டும் என்றும் வாதிடுகின்றனர். மாறாக ஈழத்திலும் தமிழகத்திலும் சாதியை ஒழித்த ஓர் இன ஒற்றுமை உருவாகும்போது தான் நாம் நமது இனத்திற்கான ஒருமித்த விடுதலையை வெல்ல முடியும். நாம் பேசும் போராடும் தமிழ்த் தேசியம் அத்தகையதாக இருக்க வேண்டும். அது வரை நிகந்து கொண்டிருக்கும் போராட்டங்களெல்லாம் ஓர வஞ்சனைகளுடன் கூடிய உரிமைகளின் அரசியலையே பேசுவன..
tamilnadu cast power in numbers and jaffna cast power is education,but only cast is mostly affected in india is dalith and bramins over rulled them.in srilanka estate tamils who wast their earning on alcohol which sad reality,and their life standard worse than whole srilanka.
tamil politicians stil play with their life.
i am bit surprised why vellars were chosen,in all total population in srilanka vellars numbers are very small,over all minority community.
still blaming vellars,what you got in your mind?
சதாமின் ஜனநாயக மறுப்புத் தான் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்கக் காரணம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களானால் தங்கள் பதிலை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
குட்டி ரேவதி போன்ற நண்பர்கள், உங்களுக்கு தெரியாத விஷயங்களை எழுதும் போது, சம்பந்த பட்ட எங்களை போன்றவர்களிடம் உறுதி செய்து விட்டு எழுதுவது நல்லது. இலங்கைக்கு130 ஆண்டுகளாக கூலி தொழிலாளிகளாக அழைத்து செல்லப் பட்டவர்களில் முக்குவர்களும், மீனவர்களும் (ரெண்டும் ஒண்ணுதான்) இருந்தனர் என்பது பொய்யான தகவல். இலங்கைக்கும் முக்குவர்களுக்குமான உறவு என்பது மிகப் பெரிய வரலாறு. ஈழத்தின் கிழக்கு பகுதியில் பெரும்பான்மை சமூகமாக முக்குவர் சமூகம் இருக்கிறது. கிழக்கு மாவட்டங்களில் சாதிய ஏற்ற தாழ்வுகள் மிக குறைவாக இருக்க காரணம் முக்குவர்களின் ஆளுமையே என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஏற்கனவே தங்களுடைய உறவினரான எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள், ‘தோள் சீலை போராட்டத்தில்’ முக்குவர்களை தொடர்பு படுத்தி தவறான தகவலை வாசகர்களிடம் பரப்பி விட்டார். நாடார் (சாணார்) சமுதாயத்தை சேர்ந்த பல எழுத்தாளர்களும் தொடர்ந்து இந்த வேலையை செய்து வருகின்றனர். பொது பரப்பில் மீனவர்களை பற்றிய கண்ணோட்டம், திரைப்படங்கள் வாயிலாக சீரிழந்துள்ள நிலையில், நீங்களும் அந்த வேலையை செய்ய வேண்டாம்.
எஸ்.ஏ.மகேஷ் (அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்)