தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனத்தில் (National Building Research Organization) மண்சரிவு ஆய்வு அபாய நிர்வாக பிரிவு (Landslide Research & Risk Management Division) என்ற ஒரு அங்கம் இருக்கின்றது. கொஸ்லாந்தை, மீரியபத்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதால், அங்கு வாழும் மக்களை மாற்று இடங்களுக்கு இடம்பெயர செய்யுங்கள் என்ற அபாய எச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனம், மூன்று வருடங்களுக்கு முன்னர் 2011ம் வருடத்தில் தந்ததாக, அந்நேரத்தில் இடர் நிவாரண அமைச்சராக இருந்த மகிந்த சமரசிங்க இப்போது சொல்கிறார். இந்த தகவலை குறிப்பிட்ட தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்தாகவும் சொல்கிறார்.
மலையக மக்களின் அனைத்து வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் தோட்ட நிர்வாகங்கள் மாத்திரம்தான் பொறுப்பா? அபாய அறிவிப்பு வந்த போது உடனடியாக செயற்பட்டு, மாற்று குடியிருப்புகளை அமைத்து, இந்த தோட்ட மக்களை அப்புறப்படுத்தி, அபாயமில்லா இடங்களில் குடியேற்றும் எந்தவிதமான பொறுப்பும், இந்நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு, துறை சார்ந்த அமைச்சருக்கு, இந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்து இந்த அரசுக்கு உள்ளே இருக்கும் அரசியல்வாதிகளுக்கு, மாவட்ட செயலகத்துக்கு, பிரதேச செயலகத்துக்கு கிடையாதா? மலையக தோட்ட தொழிலாளர் இந்த நாட்டு தேசிய நீரோட்டத்தில் இல்லையா? இவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? என்ற கேள்விகளை மண்ணில் புதையுண்டு போன மக்கள் சார்பாக நான் எழுப்புகிறேன் என கொஸ்லாந்தை அனர்த்தம் தொடர்பாக முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கலந்துரையாடலின் போது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இங்கு மனோ கணேசன் தொடர்ந்து கூறியதாவது
முன்னாள் இடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க அப்படி சொல்லும் போது, இந்நாள் அமைச்சர் மகிந்த சமரவீர ஆச்சரியப்படத்தக்க கதை ஒன்றை சொல்கிறார். இந்த அனர்த்தம் நிகழ்ந்தவுடன் எத்தனை பேர் காணாமல் போயுள்ளார்கள் என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் செய்தியாளர்களால் கேட்கப்பட்டபோது, அவை தோட்ட நிர்வாக பதிவு அறையிலேயே இருப்பதாகவும், அந்த அறையும் மண்ணுக்குள்ளே போய் விட்டதாகவும் கூறுகிறார். இதன்மூலம் இந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள நடைமுறையை போல், மலைநாட்டில் மலையக மக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள், பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவகரிடமோ, பிரதேச செயலாளரிடமோ இல்லை என்று புலனாகின்றது.
இந்த சம்பவத்தை ஒரு மண்சரிவு அனர்த்த சம்பவமாக மாத்திரம் காட்ட சிலர் முயல்கிறார்கள். அனர்த்தத்தில் உயிரிழந்த, சொந்தங்களை இழந்த மக்களுக்கு அனுதாபமும், நிவாரணமும் தேவை. அது என்னிடமும் எக்கச்சக்கமாக இருக்கின்றது. ஆனால், அதை சொல்லி உண்மையை திரையிட்டு மறைக்க முடியாது. உண்மையை வெளியே கொண்டுவர எம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்வோம்.
உண்மையில் மலையடிவாரங்களிலும், மலைஉச்சிகளிலும் அமைந்துள்ள லயன் குடியிருப்புகளில் வாழும் நமது மக்களின் பரிதாப நிலைமைகளையே இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது. கொஸ்லாந்தை மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலையக தோட்ட தொழிலாளர்களுக்கும், பாதுகாப்பான இடங்களில் காணிகள் பிரித்து வழங்கி, நவீன தனி வீடுகளை கட்டுவித்து, இந்த சமூகத்தின் வீட்டுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்தி நிற்கிறது. இது முதல் உண்மை.
அதுமட்டுமல்ல, திட்டமிட்ட முறையில் இந்த தோட்ட தொழிலாளர் சமூகம், இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதையும், இந்நாட்டு மாவட்ட, பிரதேச செயலக நிர்வாகங்களில் இருந்து இவர்கள் தூர இருப்பதையும் இந்த சம்பவம் படம் பிடித்து காட்டுகின்றது. இது இரண்டாம் உண்மை.
இத்தகைய ஒரு சம்பவம் இந்த நாட்டின் வட மத்திய மகாணத்திலோ, தென் மாகாணத்திலோ நடைபெற்று இருக்குமானால், இந்நேரம் முழு நாடுமே விழித்தெழுந்து, பின்னணி உண்மைகளை கண்டறிந்து இருக்கும். ஆனால், இது நடந்து இருப்பதோ 1800ம் ஆண்டுகளில் இருந்து கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்கள் என்பதால் அனுதாபம், நிவாரணம், தோட்ட நிர்வாகத்தின் மீதான விசாரணை என்று காலம் கடத்தப்படுகிறது.
உழைக்கும் மலையகத்து தோட்ட தொழிலாளர் தொடர்பான இந்த இரண்டு உண்மைகளையும், நமது இனத்து தாய்மார்களும், இளைஞர்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாக ஒரு இருநூறு சொந்தங்கள், நூறு அடி மண்ணிலே புதைந்து, உலகத்துக்கு உணர்த்தியுள்ளார்கள். இதுவே இங்கே பரிதாபம். இந்த தியாகம் வீண் போய் விடக்கூடாது. உண்மைகளை இந்நாடும், உலகும் அறிய வெளியே கொண்டு வரவேண்டும். மலையக மக்களையும், நல்லெண்ணம் கொண்ட ஏனைய மக்களையும், கொழும்பிலே வாழும் விழிப்புணர்வு மிக்க நமது இளைஞர்களையும், புலம் பெயர்ந்துள்ள நமது சொந்தங்களையும், சமூக உணர்வுள்ள ஊடகங்களையும் நான் துணைக்கு அழைக்கின்றேன்.
Mano Ganeshan, this is not the time for politics…
This is the time for act… need in action…
Ok, unite all do good for them…!