விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கள் நாட்டிற்கு தப்பிவரக்கூடும் என்று வெளியான தகவலையடுத்து, மலேசிய அரசு தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், முல்லைத் தீவு மட்டுமே எஞ்சியுள்ளது.
முல்லைத்தீவைக் கைப்பற்ற ராணுவம் மிகப்பெரும் தாக்குதலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக, அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரையும் வெளியேறும்படியும் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
விடுதலை புலிகள் மீதான ராணுவத்தின் பிடி இறுகி வருவதால் எந்த நேரத்திலும் பிரபாகரன் இலங்கையில் இருந்து தப்பி, வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து அல்லது மலேசியாவுக்கு அவர் செல்லக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபாகரன் மலேசியாவிற்கு தப்பி வரக்கூடும் என்று வெளியான தகவல்களையடுத்து, தனது கண்காணிப்பை மலேசிய அரசு அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு காவல்துறை தலைமையதிகாரி முஸா ஹுசைன் கூறியதாவது:
இலங்கையில் இருந்து தப்பி தாய்லாந்து அல்லது மலேசியாவுக்கு பிரபாகரன் செல்லக்கூடும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் நாடு தழுவிய அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.
பிரபாகரன் இங்கு வரவில்லை என்றாலும், நாட்டிற்குள் நுழையும் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு தொடரும். ஏற்கனவே பிரபாகரன் மலேசியாவில் உள்ளாரா என்பதை கண்டறிய, எங்கள் புலனாய்வுத் துறையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்