ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி நாளை 2 ஆம் திகதி முதல் ஒத்துழையாமைப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டத்தொழிலாளர்களிடம் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க அரசியல் முக்கியஸ்தர்கள் இன்று கொட்டகலையில் ஒன்று கூடி இதற்கான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த 31 ஆம் திகதி கொட்டகலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படாத காரணத்தினால் இது விடயத்தில் அடுத்தக் கட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேற்படி கலந்துரையாடல் கூட்டம் இடம் பெற்றது.
கூட்டத்தில் இ.தொ.கா. தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம், பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண சபைத் தமிழ்க் கல்வியமைச்சர் வி.ராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ரமேஷ், ராம், சிங்பொன்னையா, இ.தொ.கா. உபதலைவர் ஏ.எம்.டி.இராஜன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் ,உறுப்பினர்கள், இ.தொ.கா. உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், தோட்டக்கமிட்டித் தலைவர்கள், மாதர் சங்கத் தலைவிகள், இளைஞர் அணி உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் 1.00 மணிவரை இடம் பெற்றது. கூட்டத்தின் போது, தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் 500 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதெனவும் இதனை வலியுறுத்தும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாககங்களுக்கு ஒத்துழையாமை போராட்டங்களை முன்பெடுப்பதற்கும் திர்மானிக்கப்பட்டது.
இந்த ஒத்துழையாமைப் போராட்டம் ஒவ்வொரு தோட்டத்துக்கும் ஏற்றவகையில் மேற்கொள்வதற்கும் ஆலோசிக்கப்பட்டது. அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான மற்றுமொரு பேச்சுவார்த்தைக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வருமாறு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இ.தொ.கா. பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ஊடக செயலாளர் கே.பி.சத்திவேல் தெரிவித்தார்.