மறந்துபோய்விட முயற்சிக்கிறேன்..
கடந்தனவும் நிகழ்வனவும்
கைகோர்த்துக்கொள்ள மறுக்கும்
ஒவ்வோரு இரவிலும்…
மறத்தலுக்கன போராட்டம்
உறக்கத்தின் ஒரு பாதியை தின்று தொலைக்கிறது.
கருகிப்போன பாலை மரத்தில்
தொங்கிய கைகுழந்தையின் கைகள்,
போர்முனைக்கு நடத்திச்செல்லப்பட்ட
மாலதி அக்கா,
மறந்துபோய்விட முயற்சிக்கிறேன்..
அணைக்கும் சுகத்திலும்
துப்பாக்கிகளின் வெம்மைய உணர்வதாய்
பெருமிதம் கொண்டவனின்
இல்லாமல் போதலை,
நாம் காலாற நடந்த
அந்த நிலத்தின் சுவடுகளில்
இரத்தம் கலந்த பச்சை மனிதர்களின்
உல்லாச உலாவை,
மறந்துபோய்விட முயற்சிக்கிறேன்..
நாளைய பொழுதை
அம்மாவும், நானும்
அப்பாவும், தாத்தாவும்
செத்துத்தொலைத்துவிடாமல்
கடத்தியாகவேண்டும்…
வயல் வரப்புக்கள் எங்கும்
சிவப்பு இரத்தமும் சதையும் நிறைந்த
பச்சை மனிதர்கள்..
நெற்கதிர்களுக்குப் பதிலாக..
என்னையே நான் மறந்துவிடச் சொல்கிறார்கள்..