பாஜகவை எதிர்ப்பதாக கூறி திவீரமாக அரசியல் செய்யும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு மாநில தலைவர்களை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சியையும் பல இடங்களில் உடைக்கிறார். பல மாநிலங்க் கட்சிகளுடன் சேர்ந்து இந்திய அளவில் ஒரு அணியை உருவாக்க முனைகிறார். இது 2024-ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கே பயன்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரியவித்தனர்.
சமிபத்தில் மும்பை சென்று சென்று மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்த மம்தா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதனால் மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சிவசேனா காங்கிரஸ் கூட்டணியில் தொடரப்போவதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் கோவாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், காங்கிரசின் அணுகுமுறையும் மம்தாவின் அணுகுமுறையும் இணைவது நாட்டிற்கு நல்லது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “மம்தா என்னுடைய நண்பர். எனக்கு அவரை 20-25 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை உள்ளது, எங்களுக்கு வேறு ஒரு வகை அணுகுமுறை உள்ளது. இரண்டு அணுகுமுறைகளும் ஒன்றிணைந்தால் அது நாட்டிற்கு நல்லது. சஞ்சய் ராவத் மிகவும் பொறுப்பான கருத்தை கூறியுள்ளார் என நினைக்கிறேன். நாட்டில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி தேவை என்றும், காங்கிரஸ் கட்சி தலைமை ஏற்று அனைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் கூற வருகிறார். இது மிகவும் விவேகமான கருத்து என நான் நினைக்கிறேன். நான் சஞ்சய் ராவத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.