மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணி ஒன்றை அமைக்க எடுக்கும் முயற்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை உருவாக்கும் எனத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாக மும்பையில் முகாமிட்டுள்ள மாம்தா பானர்ஜி சரத்பவார். ஆதித்ய தாக்கரே, சஞ்சாய் ராவத் போன்றோரை சந்தித்து பேசி வருகிறார். இவர்கள் அனைவருமே பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கூட்டணியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தலில் பாஜகவை வீழ்த்தி பிரமாண்ட வெற்றி பெற்றார் மம்தா பானர்ஜி. அவரை தோற்கடிக்க பாஜக எடுத்த அனைத்து அஸ்திரங்களும் தோல்வியில் முடிந்தன.ஆனால் மம்தாவின் கோவம் பாஜக மீது மட்டுமல்ல காங்கிரஸ், இடதுசாரிகள் மீதும் உள்ளது.காரணம் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தன்னை தோற்கடிக்க முயன்றதாக நினைக்கும் மம்தா பானர்ஜி தேசிய அளவில் தானே முன்னின்று மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவை வீழ்த்தி விடலாம் என நினைக்கிறார்.
”மோடி பாஜக போன்றவைகள் வீழ்த்தவே முடியாத சக்திகள் என்ற போலி பிம்பம் உருவாக காங்கிரஸ் கட்சிதான் காரணம். வேளாண் சட்டங்களை விவசாயிகள்தான் வீழ்த்தினார்கள். காங்கிரஸால் பாஜகவை எதிர்கொள்ள முடியவில்லை எனில் ஏன் தேசிய அளவில் அவர்களை முன்னிறுத்த வேண்டும்” என்பது மம்தாவின் எண்ணம்.
அதனால்தான் தனது கட்சியை கோவா உட்பட தேர்தல் நடக்கும் அத்தனை மாநிலங்களிலும் களமிரக்க இருக்கிறார் மம்தா. உத்தரபிரதேச தேர்தலைப் பொறுத்தவரை அகிலேஷ் யாதவை ஆதரிக்கிறார். அங்கு அகிலேஷ் வெற்றி பெறுவார் என கணிக்கப்படும் சூழலில் அந்த முடிவை எடுக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் தனித்து போட்டியிடுவதோடு காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கட்சிகளை குறி வைத்து தன் பக்கம் இழுத்து வருவதோடு காங்கிரஸ் கட்சியினரையும் தங்கள் கட்சியில் சேர்த்து வருகிறார். இது இந்திய அளவில் பாஜகவுக்கு வலுச்சேர்க்கும் என்ற பார்வையை பலரும் முன் வைக்கும் நிலையில் மம்தா பானர்ஜியை பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் விமர்சிக்கத் துவங்கியுள்ளது.