இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அரச தலைவர் மகிந்த பதவியிலிருந்து நீக்கினார் என்று பாகிஸ்தான் நாளிதழான ‘நேஷன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவில் இராணுவப்புரட்சி ஒன்று ஏற்படவுள்ளதாக இந்திய தரப்பினருக்கு கிடைத்த நம்பகரமான புலனாய்வு தகவலை அடுத்து மகிந்தவுக்கு மன்மோகன் சிங் மேற்படி அறிவுறுத்தலை விடுத்தார் என்று அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 21 ஆம் 22 ஆம் திகதி இரவு மகிந்தவை தொலைபேசியில் தொடர்புகொண்ட மன்மோகன் சிங் –
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதுடன் சிறிலங்காவில் இராணுவ வலிமை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக சிறிலங்காவின் ஜனநாய அமைப்புக்கள் இராணுவத்தினரின் வசம் வீழக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இடம்பெற்றது போன்ற சம்பவங்களுக்கு இடமளிக்காமல் இராணுவ தளபதியின் இடத்துக்கு வேறொருவரை நியமிப்பது சிறிலங்காவுக்கு அவசியமாகியுள்ளது என்று கூறினார் என்றும் ‘நேஷன்’ செய்தி குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவின் பாரிய இராணுவ வெற்றியை இந்தியா அறவே விரும்பவில்லை. போர் முடிவடைந்து அங்கு அமைதி நிலவினால் இந்தியாவின் ஆதிக்கம் சிறிலங்காவில் செல்லுபடியற்றதாகிவிடும் என்று இந்திய திடமாக நம்பியது. இதனால் கொழும்பிலும் புதுடில்லியிலும் செயற்பட்ட றோ உளவு நிறுவனத்தின் திட்டமிட்ட நடவடிக்கையாகவே சரத் பொன்சேகா இராணுவ தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.