பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் காணாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது. 2 தீவுகள் ஏற்கனவே கடலில் மூழ்கிவிட்டன. மற்ற தீவுகளின் பரப்பளவும் வேகமாக சுருங்கி வருகிறது.
இதைத் தடுத்து தீவுகளைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உலக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் உயிர்ப் பல்வகைமைகளுக்கு மன்னார் வளைகுடா புகலிடமாக உள்ளது. கடல்வாழ் உயிரினங்களை பொருத்தவரை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் வளமான பகுதியாக கருதப்படுகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசு மன்னார் வளைகுடாவை பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக 1980இல் அறிவித்தது.
560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.
இந்த பூங்காவின் முக்கிய அங்கமாக விளங்குபவை இங்குள்ள வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு ஆகிய 21 தீவுகளும்தான். இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள், வேம்பார் குழுவில் 3 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகள் அமைந்துள்ளன.
கடல் சூழலிலும், கடற்கரை பாதுகாப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகள் அண்மைக்காலமாக பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் தீவுகளின் நிலையும் மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் 21 தீவுகளும் காணாமல் போகும் நிலை உருவாகும் என அச்சம் தெரிவிக்கிறார் இந்த பகுதியில் ஆய்வு நடத்தி வருபவரும், நிலத்தியல் துறை நிபுணருமான என்.கிளாட்வின் ஞான ஆசீர்.