மனித உரிமைகள் தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை மீறியதன் காரணமாக இதுவரை பெற்றுவந்த வாணிப முன்னுரிமைச் சலுகைகளை (Generalized system of Preferences – GSP) பெறுவதில் சிறிலங்காவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பிரஸ்சல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வாணிப பேச்சாளர் லட்ஸ் குல்நர் கூறியுள்ளார்.
வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அளிக்கும் இந்த வாணிப முன்னுரிமைச் சலுகை, முறையான அரசு நிர்வாகம், பரவலான மேம்பாடு ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். இதன் கீழ் மனித உரிமைகளைப் பேணுதல், அது தொடர்பான பன்னாட்டு உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகியன முக்கியமானதாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்களும், தற்போது முகாமில் அடைத்து வைத்துள்ள தமிழர்களுக்கு மனித உரிமை மறுத்தல்களும் ஐ.நா. உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
சிறிலங்காவிற்கு எதிரான குற்றச்சாற்றுகளை ஆராய்ந்தப் பின்னரே அதற்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள வாணிப முன்னுரிமைகளை இரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.