தமது அடக்கு முறைகளிற்கேற்ற சிந்தனை முறைகளையும், சமூக தர்மத்தையும், ஒழுங்கமைவுகளையும் உருவாக்குவதிலிருந்தே ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கம் ஆரம்பமாகிறது. இதனூடாக தனக்கேற்ற உலக மாதிரியை உருவாக்கிக்கொள்ளும் ஏகாதிபத்தியங்கள் தமது அதிகார பலத்தை அழிவுகளின் மத்தியில் நிறுவிக்கொள்கிறது. புதிய ஒழுக்கமுறைகள், புதிய சமூக தர்மம், சமூக நியாங்கள் போன்ற தமது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதக்கூட்டத்தை தனது ஒவ்வொரு தோல்வியின் போதும் உருவாக்கிக்கொள்ளும் ஏகபோகங்கள், அடக்குமுறைகெதிரான சமுக எழுற்களைத் திசைமாற்ற இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
மேலை நாடுகளின் தொழில் நுட்பத் திறனையே ஆதாரமாகக் கொண்டெழும் இவ்வகையான சமூக மாதிரிகள் இலங்கையை மட்டுமல்ல இன்னும் பல மூன்றாமுலக நாடுகளையும் ஏகாதிபத்தியங்களின் சொந்த நலன்களுக்காக கொலைக்களங்களாக்க வல்லன.
சொவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏகாதிபத்தியங்கள் தனக்க்குத்தானே கட்டமைத்துக் கொண்ட எதிரிதான், இஸ்லாமிய அடிப்படைவாதம். அமரிக்க அணியின் இராணுவக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், உலகமயமாதலின் பின்பான நெருக்கடிகளைக் கையாளவும் ஏகாதிபத்தியங்களுக்குத் துணைபோன இந்த “உருவாக்கப்பட்ட” எதிரிக்கெதிரான போராட்டத்தின் பொதுமைபடுத்தப் பட்ட வடிவம் தான் “பயங்கர வாதத்தின் மீதான போர்”. இந்தப் பயங்கர வாதத்திற்கெதிரான போர் உருவாக்கிய நியாயத்தின் உப வடிவம் தான் இன்றைய இலங்கை அரசின் தமிழ் பேசும் மக்கள் மீதான யுத்தம்.
பின் லாடன் என்ற அமரிக்கவின் உருவாக்கமான இஸ்லாமிய அடிப்படை வாதியாகட்டும், அமரிக்கா வளர்த்தெடுத்த சதாம் ஹுசைனாகட்டும், இவர்கள் போன்ற இன்னும் ஆயிரக்கணக்கனவர்களை பயங்கவாதிகளாகவும் மக்களின் எதிரிகளாகவும் சித்தரிப்பதற்கு எந்த சமூக உணர்வுள்ள மனிதனும் பின்னின்றதில்லை.
ஆனால், ஈராக்கில் 6 லட்சம் குழந்தைகளைக் கொன்றுபோட்டுவிட்டு ஜனநாயகம் பேசுவதற்கும், ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கில் அப்பாவிகளைக் சாகடித்துவிட்டு நியாயம் சொல்வதற்கும் ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய சிந்தனை முறையும் அதன் நவீன- சமுகமாதிரியும் தான் துணை புரிகிறது.
ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்களின் ஜனநாயக சுதந்திரம் விவாதித்துக் கொண்டதெல்லாம் ஒன்றுதான் “சதாம் ஹுசையின் சரியானவரா தவறானவரா” என்பது மட்டும்தான். அமரிக்க ஆக்கிரமிப்பு சரியானதா தவறானதா என்பன போன்ற விவாதங்களுக்கு இடமளிக்கப்படவேயில்லை. இங்கு சதாம் தவறானவர் என்ற அடிப்படையில் அமரிக்காவின் ஆக்கிரமிப்பு நியாயமானதென்றும், அதனை எதிர்த்த இஸ்லாமிய ஜனநாயக வாதிகள் அடிப்படைவாதிகளாகவும் கற்பிக்கப்பட்டனர். ஐரோப்பிய மக்கள் மத்தியில் இஸ்லாமிற்கெதிரான உணர்வுகள் விதைக்கப்பட்டன. இஸ்லாம் நவீன சமூகத்திற்கெதிரான பயங்கரவாத மதமாகச் சித்தரிக்கப்பட ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஈராக்கிய அப்பாவிகளின் அழிவிற்கான நியாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதே பொறிமுறை தான் ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்பிற்கும் கையாளப்பட்டது. இப்போது குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடின்றி அப்பாவிகளின் அழிவை நியாயப்படுத்தும் ஒரு சமூகம் தயாராகிவிட்டது. இங்கே அதிகாரத்தை எதிர்ப்பவர்களும், அதிகார வர்க்கமும் அப்பாவிகளை அழிப்பவர்களாக, இந்த இரண்டு தரப்பிலும் தவிர்க்க முடியாமலும், கற்பிக்கப்பட்ட நியாயங்களின் அடிப்படையிலும் அணிசேர்ந்து கொள்ளும் மக்கள் ஒன்றுக்கொன்று எதிரான பாசிசங்களை உருவாக்குகிறார்கள். ஆப்கனிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், சூடானிலும், சோமாலியாவிலும், இலங்கையிலும் இந்தப் பாசிசம் உருவாக்கிய சமூக மாதிரிதான் ஆதிக்கம் செலுத்துகிறது.
உலகமயமாதலின் பின்னான சமூக மோதல்களைக் ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பாகக் கையாளும் திறன்கொண்ட இக் கருத்தியலின் மிகப்பெரிய பண்பு நிலையானது மக்களின் அழிவை வெற்றிக்கான முன் நிபந்தனையாக முன்வைப்பதாகும்.
சே குவேரா தான் மக்களின் அழிவை குவியத் தத்துவம் என்ற பெயரில் வெற்றியின் சாராம்சமாக முன்வைத்தவர். ஜோசப் ஸ்டாலினை கொடிய மனிதராகச் சித்தரிக்கும் ஏகாதிபத்தியம் சே குவேரா படம்பதித்த மேலணிகளோடு தனது குழந்தைகளை அலைய விட்டிருக்கிறது.
இரண்டு பாசிசங்களிடையேயான மோதலை அடிப்படையாக முன்வைத்து உருவான இந்தச் சமூக மாதிரிக்கெதிரான உணர்வுகளைக் கூட ஏகதிபதியங்கள் தமது கைகளிலேயே வைத்துக்கொள்கின்றன. குடிமைச் சமூகங்களையும், தன்னார்வ அமைப்புக்களையும்(NGO) தனது சிலந்திவலைக்குள் முடக்கிவைத்டுக்கொண்டு மனித உரிமையைப் பேசும் உரிமையைக் கூட தானே குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
ஹுயுமன் ரைட்ஸ் வாசும், சர்வதேச மன்னிப்புச் சபையும் சொன்னால் தான் மனித உரிமை மீறல் என்ற பரிதாப நிலை ஜனநாயகத்திற்கு.!
இந்த ஏகாதிபத்திய உருவாக்கமான குரூரமான நவீன- சமூக மாதிரியின் இலங்கைப் பிரதி தான் இன்று நடந்து கொண்டிருக்கும், மனித அழிப்பு.
உலக நாடுகள் அனைத்திலும் நடந்தேறிய அதே அழிவும் அதே முறைமையும் தான் இங்கும். அரச பாசிசம், புலிகளின் பாசிசம், இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் இந்தக் கருத்தியலால் ஆட்கொள்ளப்பட்ட சமூகம், இந்தக் குட்டையில் ஏகாதிபத்தியத் தூண்டிலில் மீன்பிடிக்கும் தன்னார்வ அமைப்புக்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்க முனையும் அரசியற் கட்சிகள் இவைதான் மக்களை அழிக்கும் சமூகத்தின் நேரடியானதும் மறைமுகமானதுமான எதிரிகள்.
1. 50 வருடங்கள் நீளும் தேசிய இனப்பிரச்சனைக்கு எந்தத் தீர்வையும் முன்வைக்க விரும்பாத மகிந்த குடும்ப பாசிசமும் அதன் உள்நாட்டு வெளி நாட்டு அடிவருடிகளும், அப்பாவிகளின் அழிவை மகிந்த குடும்பத்தின் வீரமாகப் பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மைச் சிங்கள மக்களின் மத்தியில் பௌத்த- சிங்களப் பெறுமானங்களின் பாதுகாவலனாக உருவகிக்கப்பட்டுள்ள மகிந்த இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசியப் பிராந்தியத்திற்கே ஆபத்தான அரச பயங்கரவாதி. தமிழ் மக்களின் அழிவானது சிங்கள தேசத்தைப் பாதுகாக்கும் என்ற கருத்தியலோடு, சிங்கள சமூக மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. சாரி சாரியாக அப்பாவிகள் அழிந்து போவதை நியாயப்படுத்தும் இக்கருத்தியலின் பிரதியான சிங்கள அப்பாவி மனிதன் தனக்கு முன்னாலுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்வதில்லை.
2. மக்களின் அழிவு தான் தனது ஆயுதமென்று செத்துப் போகும் பிஞ்சுக குழந்தைதைகளைப் புகப்படமெடுத்து பிரச்சாரம் செய்வதற்காக வேட்டைக்காரர்கள் போல அலையும் புலிகள், மகிந்த பாசிசத்தின் கருத்தியலுக்குத் தர்மீக நியாயத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.சொந்த மக்களை அரசின் குண்டுகளின் நடுவில் நிறுத்திவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளும் புலிகள் தான் அரசின் திட்டமிட்ட இன அழிப்பை நியாயப்படுத்தும் முதலாவது சக்திகள். குண்டுகளிலிருந்து தப்பியோட முயலும் ஒவ்வோரு அப்பாவியும், துரோகியாக்கப்பட்டு துவம்சம்செய்யப்ப்டுகிறான். அரசிற்கெதிரான போராட்டத்தை வலிந்து தனது பிடியில் வைத்திருப்பதால், புலிகளால் அழிந்துபோகும் மக்களைக் கண்டுகொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மனித அழிவிற்கான கருத்தியலின் மறுபக்கப் பிரதிநிதிகள்.
3. இந்த இரண்டு பக்கத்தையும் நியாயப்படுத்தும் அரசியல் வியாபாரிகள், மனிதப் பேரழிவில் தமது ஆதிக்கத்தை நிறுவ முயல்கின்றனர். யாழ்ப்பாணமும், கிழக்கும் தான் இவர்களின் பரிசோத்னைக் கூடங்கள். மனித அழிப்பிற்கான கருத்தியலின் அரசியல் கர்த்தாக்களான இவர்கள் ஒரு புறத்தில் பயங்கர வாதத்திற்கெதிரான போர் என்றும் மறு புறத்தில் மண் மீட்பிற்கான போர் என்றும் மக்களின் அழிவை நியாயம் சொல்கின்றனர். -மிகுதி மறு பாகத்தில்..-