09.09.2008.
பெய்ஜிங்:
3 மனிதர்களுடன் கூடிய, விண்கலத்தை சீனா அனுப்புகிறது. 3வது முறையாக இதுபோன்று சீனா அனுப்புகிறது.
இந்த மாதம் 25-30ம்தேதி கால கட்டத்தில் ஷென்சோ-7 என்ற அந்த விண்கலத்தை ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து சீனா ஏவுகிறது. இந்த ஏவுதளம் வடமேற்கு சீனாவில் உள்ள கான்சு மாகாணத்தில் அமைந்துள்ளது.
விண்கலத்தை ஏவுவதற்கான அனைத்து முறைகளும் இறுதி கட்டப் பணியில் உள்ளன. விண்கலத்திற்கான இறுதி கட்ட சோதனையும் அதனை கொண்டு செல்லும் 2 எப் ராக்கெட் ஆகியவையும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, திருப்தியான நிலையில் உள்ளன.
ஏவுதளம், தரை கட்டுப்பாட்டு முறை தகவல் மற்றும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நிலைகள் ஆகியவையும் முழுமையான நிலையில் உள்ளன.
ஷென்சோ-7 விண்கலம் தனது சுழற்சி பாதையை அடைந்ததும், விண்கலத்தில் உள்ள 3 பேரில் ஒருவர் வான்வெளியில் நடந்து செல்வார் என மூத்த விஞ்ஞானி சாவோ சாங்ஜி தெரிவித்தார். விண்வெளி வீரர் விண்ணில் நடந்து செல்வதை சீனா நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
சீனா ஏற்கெனவே 2003ம் ஆண்டிலும் 2005ம் ஆண்டிலும் மனிதருடன் கூடிய விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
3வது முறையாக மனிதருடன் கூடிய விண்கலத்தை தற்போது சீனா அனுப்புகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 3வது நாடாகவும் சீனா உள்ளது. அமெரிக்கா, சோவியத் யூனியன் (ரஷ்யா) ஏற்கெனவே மனிதர்களுடன் கூடிய விண்கலத்தை அனுப்பியுள்ளது.