விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்க மனிதநேயப் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதில் தாம் தோல்வியடைந்திருப்பதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
“இதற்கு நாம் கடுமையாக முயற்சித்தோம். மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், மனிதநேயப் பணியாளர்களை அனுமதிப்பதும் தடுப்பதும் எமது நண்பர்களின் கையில் உள்ளது” என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர், இலங்கை வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் ஆகியோர் இன்று புதன்கிழமை இலங்கை வந்தனர். அவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
எனினும், இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், போர்நிறுத்தமானது பொதுமக்களை மீட்பதற்கன்றி விடுதலைப் புலிகளுக்காக அல்ல என்பதை இலங்கை அரசாங்கம் மீண்டும் நினைவுபடுத்தியதாகக் கூறினார்.
மோதல்களை நிறுத்தி பொதுமக்களைப் பாதுகாக்குமாறு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளானது செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல அமைந்திருப்பதாக பிரித்தானிய இராஜதந்திரிகள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்தச் சந்திப்பில் சுமுகமானதொரு சூழ்நிலை நிலவில்லை” எனக் கொழும்பிலுள்ள இராஜதந்திரியொருவர் ஏ.எவ்.பி.க்குக் கூறியுள்ளார்.
“சர்வதேசச் சட்டங்களை மதித்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தனர்” என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு ஏ.எவ்.பி.க்குத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியா, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் சுவீடன் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வரவிருந்தபோதும் அவருக்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கவில்லை.
ஒரே நேரத்தில் பல இராஜதந்திரிகள் வரும்போது அனைவரையும் சரியாகக் கவனிக்கமுடியாது எனக் கூறியே சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக சுவீடன் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.