ரஷ்யக் கலாசார மையத்தில் Women and Media Collective னரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு திரைப்பட விழா.. ஓரினப் பாலுறவாளர்கள் பற்றிய மலையாளத் திரைப்படம் ‘சஞ்சாரம்’. Fire போன்ற இன்னபிற படங்களைப்போல அதிகம் வர்த்தகமயப்படுத்தப்படாத படம். மிகச் சுருக்கமாகக் கதையைச் சொல்வதானால்:
காடு, நீர்வீழ்ச்சி, ஆறுகளுடன் கூடிய ஒரு அழகான கிராமம். கிரண், டிலைலா – சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய தோழிகள். டிலைலா தந்தையை இழந்தவள், அம்மாவுடனும், அம்மம்மாவுடனும் வாழ்ந்து வருகிறாள். கிரண் ஒரு கவிஞை. காது கூட குத்தாமல், நகைகள் அணிய பிரியப்படாமல் தனது சுயவிருப்புடன் வளர்ந்தவள். அவளது அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு அப்பா அவளுக்கு வாய்த்திருக்கிறார். வளரும் பருவத்தில் கிரணுக்கு டிலைலா மீது ஈர்ப்பு வருகிறது. இவர்களது வகுப்பைச் சேர்ந்த ஒருவனும் டிலைலாவுக்குப் பின்னே அலைகிறான். டிலைலாவை நெருங்க கிரணின் உதவியை நாடும் அவன் மூலம் தனது ஈர்ப்பை அவளுக்கு வெளிப்படுத்த கிரணால் முடிகிறது. டிலைலாவும் சம்மதிக்க, அவர்களுக்கிடையிலான நெருக்கம் தொடர்கிறது. ஒருகட்டத்தில் அவர்களது வகுப்பாசிரியைக்கு இது தெரியவருவதுடன், டிலைலாவில் நாட்டம் கொண்டிருந்த அந்த மாணவனுக்கும் இது தெரியவர, டிலைலாவின் தாயிடம் உண்மையைக் கூறிவிடுகிறான். அதிர்ச்சியடைந்த டிலைலாவின் அம்மா மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்க அவசரப்படுகிறாள். டிலைலாவும் தமக்கிடையிலான இந்த உறவு சமூகத்தாலும், ஏன் அம்மாவாலுமே கூட ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லையென அறிந்து, திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். இதுதெரியவந்த கிரண் வீட்டை விட்டு வெளியேறுவோமென முடிவெடுத்தாலும், டிலைலா அதற்கு உடன்படவில்லை. இறுதியில், டிலைலாவுக்குத் திருமணம் நடைபெறுகிறது, முதலில் தற்கொலைக்கு முயற்சிக்கும் கிரண் பின் மனம் மாறி, தன் வாழ்வின் போக்கைத் தானே தீர்மானிப்பவளாக மாறுகிறாள்.
நிகழ்வு ஒருங்கமைப்பாளர்கள் மீது ஏராளமான விசனம், சிங்கள மொழியில் மட்டும் subtitle போட்டது, கலந்துரையாடல் சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றதென. தம்மருகிலிருக்கும் சிறுபான்மையினரைப் புறக்கணித்துக் கொண்டு எப்படி விளிம்புநிலைப்படுத்தப்பட்ட இன்னுமொரு குழுமத்தினரைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட முடிகிறது, அதனூடாக எத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டுமென எதிர்பார்க்கிறார்களென்பதும்.. அவற்றைப் புறந்தள்ளி, படத்தைப் பார்த்தாலும், இத்தகைய படங்களை, அல்லது நாவல்களை எடுத்துக்கொண்டால் சிந்தனையில் இடறுமொரு விடயம், ஓரினப் பாலுறவிலும் ஆண் – பெண் என்ற எதிர்நிலைகள் கட்டமைக்கப்படுவது ஏன் என்பது. உடலமைப்பில் – அதாவது பால் ரீதியாக இருவரும் பெண்களாயிருந்தாலும், அங்கு ஒருவர் ஆண் என்ற – பாலினக் கட்டமைப்பினடிப்படையிலும் (ஆணாக உடையுடுத்துவது, தலைமை தாங்குவது…) மற்றவர் பெண்ணாகவும் (பயந்த சுபாவமுடைய, அழகாக வெளிக்கிடுவதில் நாட்டமுடைய, கொஞ்சம் பின்னிற்கும்) காட்டப்படுவது ஏன் என்ற கேள்வி குடைந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஆண் என்ற பாத்திரத்தையும், மற்றுமொருவர் பெண் என்ற பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. ஓரினப் பாலுறவிலும் இந்த ஆண்-பெண் எதிர்நிலை கட்டமைக்கப்படுவது ஊடக மற்றும் mainstream னரின் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வா அல்லது இயற்கையானதா என்ற சந்தேகம் எழுகிறது. நண்பரொருவர் அதுவே இயற்கையாகவிருக்கலாம் என்றார். ஆனாலும்.., அதது அவர்களவர்களால் தான் பேசப்பட்டாக வேண்டும். அப்போதுதான் அது நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கக்கூடும். நாம் எமது பாட்டில் சிந்திப்பதும், முடிவெடுப்பதும் கடைசியில் பெண்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்க முனைந்ததைப்போல, அவ்விளிம்புநிலைப்படுத்தப்பட்டவர்கள் மீதான மற்றுமொரு வன்முறையாகத்தான் அமையும். நாங்கள் செய்யக்கூடியதெல்லாம் இப்படியும் விடயங்களிருக்கின்றன என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைவதும், அவர்களையும் எம்மைப்போன்ற அதே உணர்வுகள் கொண்ட மனிதர்களாக மதிக்கும் மனப்பக்குவத்தை எம் ஒவ்வொருவரின் மனதிலும் வளர்த்துக் கொள்வதாகுமென்று நினைக்கிறேன்.
………………….
கலந்துரையாடலின் போது ஒருங்கமைப்பாளர்களுள் ஒருவர் இத்தகைய சமூக நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த என்ன செய்யலாமென நினைக்கிறீர்களெனக் கேட்டார். பார்வையாளரொருவர் வேடிக்கையாக, வருடத்துக்கு இப்படி இரண்டு திரைப்பட விழாக்களை ஒங்குபடுத்துங்கள் என்றுகூற, அரங்கு முழுதும் சிரிப்பலை பரவியது, என்ற ஒரு உழுத்துப்போன சொற்றொடரை எடுத்தெறிந்து கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.
சமூக மாற்றம் அல்லது விழிப்புணர்வு.. (தனியே ஓரினப் பாலுறவாளர்கள் பற்றி மட்டுமல்ல, இன்னபிற controversial issues அனைத்தையும் பற்றிய) இதைக் கொண்டுவர என்னசெய்யலாமென்பது பொதுவாக இத்தகைய விடயங்களில் ஆர்வமுடைய, சமூக அக்கறையுடைய ஒவ்வொருவரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய முக்கியமான கேள்வி. அதிகம் பகிரங்கமாகப் பேசப்படாத இவ்விடயங்களை, விளிம்புநிலை மக்களின் குரலை எழுத்தில் பதிவது ஒரு வழி, திரைப்படங்கள் போன்ற காட்சியூடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது இன்னொன்று, அடுத்தது களத்திலிறங்குவது. இவையொவ்வொன்றும் தமதேயான வழிமுறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த துணைநிற்கின்றன. களத்திலிறங்குவதற்கு முதல் எழுதி வைக்கவேண்டும், ஆவணமாகப் பதியவேண்டுமென சொல்லித்திரிவதும், எழுதிக்கிழித்து என்ன பிரயோசனம் செயற்பட மட்டுமே வேண்டுமெனக் கூறுவதும் இரண்டும் பயனற்றவை. தண்டவாளங்கள் எப்போதும் சமாந்தரமாகப் பயணித்தாக வேண்டும். ஆவணங்களும் பதிவுகளும் முறையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதும், மக்கள் மத்தியில் இயங்கும் இயக்கங்களின் செயற்பாடுகள் பதிவுசெய்யப்படுவதுமென எழுத்தும் செயற்பாடும் தமக்கிடையே இடையீடு செய்தபடியிருந்தால் மட்டுமே ஏதேனுமொரு சிறிய மாற்றமாவது ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவும். இரண்டும் ஒரே நபரால் நிறைவேற்றப்படுவதும், தமக்கு விருப்பமான, சாத்தியமான வழிவகையைத் தேர்ந்துகொண்டு தன்னாலான பங்களிப்பை வழங்குவதும் அவரவரது தெரிவு. இதில் எந்தவொரு வழிமுறையும் நூற்றுக்கு நூறு வீதம் சரியானதுமல்ல, நூறுவீதம் சமூக மாற்றத்துக்கான சாத்தியக்கூற்றினைத் தனக்குள் கொண்டதுமல்ல.
ஆனால், இந்தக் களத்திலிறங்குவது அல்லது செயற்படுவதென்றால் என்னவென்பது அடுத்த கேள்வி. ஏதோவொரு அமைப்பில் சேர்ந்துகொண்டு விடுதலை வேண்டும், சமத்துவம் வேண்டுமென கொடிகளும், பதாகைகளும் தூக்கிக்கொண்டு திரிந்தாற்போல சாத்தியமாகக்கூடிய விடயங்களல்ல இவை. சமூகமென்பது தனிமனிதர்களின் தொகுதி. தனிமனித விழிப்புணர்வு ஏற்படாத ஓரிடத்தில் சமூக மாற்றமும் சாத்தியமில்லை. எந்தவொரு விடயமும் முதலில் தனிமனிதனிலிருந்து ஆரம்பித்தாக வேண்டும்.
ஒரு மனிதன் தனக்குத்தானே நேர்மையுடையவனாயிருந்து, எந்தவொருவரையும் அடிமைப்படுத்தாமலோ, காயப்படுத்தாமலோ, அதிகபட்ச புரிந்துணர்வுடன் உறவுகளை அணுகி, தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் அவரவரது பலவீனங்களுடன், சக மனிதப்பிறவியாகக் கருதி நேசிப்பானேயாகில் அந்த மனிதனிலிருந்துதான் மாற்றம் தனது முதற்காலடியை எடுத்துவைக்கத் தொடங்குகிறது. தனது தாயை, சகோதரியை, மனைவியை நேசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாத ஒருவனால் பெண் விடுதலை அல்லது சமத்துவம் – அவன் என்னதான் தெருவிலிறங்கி போராடினாலும், ஆயிரமாயிரம் பெண்களைக் ‘கரையேற்றினாலும்’ – சாத்தியப்படக்கூடுமாவென்பது சந்தேகமே. அதேவேளை இந்தப் ‘பெண்ணியம், ஆண் மேலாதிக்கம், தந்தை வழி சமுதாயம்’ போன்ற பெரிய பெரிய வார்த்தைகளின் அர்த்தம் தெரியாத ஒரு சாதாரண ஆண் தனது குடும்பத்தினருடன், சக பெண்களுடன் நடந்துகொள்ளும் முறையினூடாக தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய ஆண்களின் மனதில் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், அதுவே முக்கியமானதும். அவனிலிருந்து அவனைச் சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்களென வியாபிக்கும் அவ்வதிர்வு காலப்போக்கில் மிக இயல்பானவொன்றாக ஏற்றுக்கொள்ளப்படவும் கூடும். அதேபோல, ‘எனக்காக இதைச் செய், அதைச் செய், இதைப்போடு, அதைப்போடு, இப்பதான் வடிவாயிருக்கிறாய், இல்லாட்டி அசிங்கமாயிருப்பாய்,’ என்றெல்லாம் கமெண்ட் அடித்துக்கொண்டிராமல், ‘இவனோடு பேசாதே, அவனோடு பழகாதே, என்னை மட்டுமே நினை, எனக்காக மட்டுமே கவலைப்படு,’ என்று அதிகாரம் செலுத்தாமல், ‘நீ நீயாக இருப்பதைத்தான் நேசிக்கிறேன்’ என்றுகூறும் மனப்பக்குவம் வாய்த்திருக்கும் ஒரு ஆணால் களத்திலிறங்கிப் போராடுபவனை விட அதிகம் சாதித்துவிட முடியும்.
ஆதிக்கம் என்பது எப்படி ஆண்களின் உயிரோடும் உடலோடும் வேரோடிக் காணப்படுகிறதோ அதேபோலத்தான் அடிமைத்தனமும் பெண்களும்.. நகை நட்டணிந்துகொண்டு, ‘வடிவாக’ வெளிக்கிடுவதில் பிரியமுடைய ஒரு பெண் எப்படி தன்னை விடுதலையடைந்தவளாக அல்லது அடைய முற்படுபவளாக, பிரயாசைப்படுபவளாகக் காட்டிக்கொள்ள முடியுமென்பது குறித்து சந்தேகம் கொள்கிறேன். அது உடலைக் கொண்டாடுவதென யாரும் கூறி தமக்குள் ஆசுவாசப்படலாம். ஆனால், கொண்டாடுவதற்கும் கொண்டாட்டத்துக்குத் தயார்படுத்துவதற்குமிடையே வேறுபாடுகளிருக்கின்றன. உடலைக் கொண்டாடுவதென்பது உடலை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்வதும், நேசிப்பதும். அதாவது, மற்றுமொரு பார்வையில் தனது நிர்வாணத்தை நேசிப்பது. என்று காதில் துளை குத்தி தோடு அணியவும், மூக்கில் மூக்குத்தி அணியவும் தொடங்குகிறோமோ அன்று எமது உடலின் இயல்பைக் குலைக்கிறோம், அதைச் சிதைத்து ‘இதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு’ என்று கட்டமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஒரு விம்பத்தை அவசர அவசரமாக அணிந்து அலங்கரித்துக் கொள்கிறோம். இந்நிலையில் பெண்ணுடம்பு பண்டமயமாக்கப்படுவதையும், போகப்பொருளாக எடுத்து நோக்கப்படுவதையும் எப்படிக் குறைகூற..
ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கும் பெண் பற்றிய விம்பங்களிலிருந்தான விடுதலையுணர்வு ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தானாக எழாதவரையில் யார் என்ன சமூக மாற்றத்துக்காய், எப்படியெப்படிப் போராடினாலும், திரும்பத் திரும்ப ஒரே செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருந்தாக வேண்டும்.
நாங்கள் எதற்காகப் போராடுகிறாமோ, எந்த மாற்றத்தை வேண்டுகிறோமோ முதலில் அது குறித்த பூரண விழிப்புணர்வும், நேர்மையும் எமக்கிருக்க வேண்டும். நாங்கள் வழிகாட்டிகளாக முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டவேண்டும். எமது வாழ்வும் நடவடிக்கைகளும் இன்னும் ஒரேயொரு மனிதனை தனது எண்ணம், சிந்தனை குறித்து சுய விமர்சனம் செய்துகொள்ளத் தூண்டுமாயின் அதுவே மிகப்பெரிய சாதனை.
………………………
மற்றையது, உறவுகள்.. டிலைலாவுக்குத் திருமண ஏற்பாடுகள் இடம்பெறுவது அறிந்ததும் கிரண் வீட்டை விட்டு வெளியேற அழைக்கிறாள். அதை மறுக்கும் டிலைலா, திருமணத்துக்குப் பிற்பாடும் தாம் இதேபோல இருக்கமுடியும், தமது உறவைக் கொண்டுசெல்ல முடியும் என்கிறாள். படத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவொரு பகுதியல்லவெனினும், அந்த உரையாடல் என்னைப் பாதித்திருந்தது.
நேர்மை.., ஒரு உறவிலிருந்து, அதன் பிடிப்பிலிருந்து முற்றாக விடுபடாமல் இன்னொரு உறவில் நுழைவதென்பது இரண்டையும் சிதைப்பதாகும். புதிய உறவொன்றில் நுழைவதற்கு ஒரு நேர்மை இருந்தாக வேண்டும். முறிந்து போன, அல்லது முறிக்கப்பட்ட உறவின் நினைவிலிருந்து விடுபட, தப்பியோட அல்லது பழிவாங்குமுகமாக இன்னொருவரை நேசிக்கத் துணிபவர்களின் நேசத்தின் மீது சந்தேகங்கொள்ளவே முடிகிறது. உண்மையான அன்பு பச்சாதாபத்தின் மீதோ, நன்றியுணர்வுடனோ, அல்லது வேறேதேனும் காரணம் பற்றிக்கொண்டோ எழுவதில்லை.
அடுத்தது இந்தப் பாலும், பாலினமும்.. ஆண்குறி கொண்டவர்களெல்லாம் ‘ஆண்’களாக இருப்பதுமில்லை; ஆண்குறியற்றவர்கள் அனைவருமே ‘ஆண்’களாக இல்லாமலுமில்லை. இந்த ஆண்குறி தொடக்கம் இன்னபிற உறுப்புக்கள் எல்லாம் பால் – அதாவது இயற்கை உடலமைவுடன் தொடர்புடையவை; மற்றும்படி ஆணாக இருப்பது, பெண்ணாக இருப்பதென்பது பாலினம் – சமூகம் கட்டமைத்திருக்கும் வரைமுறைகள், விதிகளுடன் தொடர்புடையவை. விமர்சிக்கப்படவேண்டியதும், மறுக்கப்பட வேண்டியதும் இந்தப் பால் வேறுபாடல்ல, பாலின வேறுபாடே.
இவையனைத்தின் பின்னமைவிலும் ஒரு படத்தை ஆழமாக இரசிக்க முடிந்தது..
எனக்கு ரொம்ப பிடிதிருக்கிரது.
கிரன் நடிப்பு superrrrrrrrrrrrrrrrrr
சுகாசினி அக்ட் very niceeeeeeeeee