காவிரி நீரில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையை மறுத்து அடாவடித்தனம் செய்கிறது கர்நாடக அரசு.
மைய அரசு மௌனம் சாதிக்கிறது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தப்பட்டன. மைய அரசு எதையும் கண்டுகொள்வதாக இல்லை. இப்போது வை.கோ எனப்படும் வை.கோபாலசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.’தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையான காவிரி நீரை, கர்நாடக மாநில அரசு அக்கிரமமான முறையில் தடுத்து வருவதால், விவசாயிகள் குறுவை, சம்பா விவசாயத்தை இழந்து மீள முடியாத நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழுமையான வடிவம் கீழே:
தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையான காவிரி நீரை, கர்நாடக மாநில அரசு அக்கிரமமான முறையில் தடுத்து வருவதால், விவசாயிகள் குறுவை, சம்பா விவசாயத்தை இழந்து மீள முடியாத நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் செப்டம்பர் 17ம் தேதிதான் திறக்கப்பட்டது. இதனால் குறுவைப் பயிர் சாகுபடி முற்றாக பாதிக்கப்பட்டுவிட்டது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதால் 12 இலட்சம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வழி தெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட செய்தி நம் நெஞ்சைப் பிளக்கிறது.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த, கூரத்தான்குடி ராஜாங்கம் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி தரத்தக்கத் தகவல் மறைவதற்குள், மயிலாடுதுறை முருகையன், நடுவேட்டியம் ராஜகோபால் ஆகிய இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். எனும் செய்தி நம்மைப் பேரிடியாகத் தாக்குகிறது.
விவசாயிகளின் துயரத்திற்கும், தற்கொலைக்கும் பொறுப்பு ஏற்கப்போவது யார்? தமிழ்நாட்டிற்கு நவம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை 4.8.டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென கர்நாடகாவிற்கு காவிரி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது. அதையும் வழங்க முடியாது என்று கர்நாடகம் கூறிவிட்டது. இது குறித்து இருமாநில முதல்வர்கள் நேரடியாக சந்தித்து பேசிய போது தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரும் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கை விரித்துவிட்டார்.
காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா பயிர் காய்ந்து கருகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநில அரசைப் பணிய வைத்து, தமிழ்நாட்டின் விவசாயிகளின் உரிமையைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, தமிழகத்துக்குத் துரோகம் விளைவிக்கும் போக்கிலேயே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. கர்நாடக அரசை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது.
ஆகவே, மத்திய அரசைக் கண்டித்து, தற்கொலை செய்துbhண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், கருகும் சம்பாப் பயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், டிசம்பர் 7ம் தேதி காவிரி பாசன பகுதிகளில் விவசாய சங்கங்கள் நடத்த இருக்கும் அறப்போராட்டத்திற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவை வழங்கும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Four DMK Parties. Political Pluralism. 1952. D. A. Rajapakse.