மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதியில் மக்கள் தங்களின் கடமைகளுக்கு செல்ல ஆயத்தமான நேரம், மாணவர்கள் எதிர்கால நோக்கத்தை அடைய துடிக்கும் நேரம், தாய்மார்கள் பிள்ளைகளுக்கு உணவை தயாரித்து கொடுத்து மகிழ்ந்த நேரம்,
கால நிலையில் குளிர் குறைந்த பிரதேசம். ஆனால் மலைகள் நிறைந்த பகுதியின் முடிவு பிரதேசம். இங்கு நடைபெற்ற கோர சம்பவம் உங்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பது உண்மை.
இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட வம்சவளி மக்கள் சமதரையில் இருந்து காடுகளையும் மலைகளையும் ஒவ்வொன்றாக உடைத்து காடழிப்பில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களின் வசதிகளுக்காக மலைப் பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு, இந்நிலங்களை பதப்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்து பயிர் செய்கையில் ஈடுப்பட்டனர்.
எம்மவரின் வரலாறு மிகவும் நீண்ட துக்கமும் ,துயரமும் கொண்ட வரலாறு. அப்போது கூட இந்த இந்தியவம்சவளி மக்களின் உழைப்புக்கள் தான் பயன்படுத்தப்பட்டது.
எம் மக்கள் முதலில் காலடி பதித்த இந்த இடத்தின் ஆரம்ப பகுதியிலேயே அவர்களின் வழித்தோன்றல் இன்றும் வாழ்ந்து வந்த பகுதிகளின் ஒரு திசையிலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆம் இலங்கையின் சரித்திரத்தில் இந்து கடவுளான முருகன் கூட இலங்கைக்கு வந்தபோது மிகவும் கவனமாக மலைப் பகுதியை தவிர்த்து கடல் பகுதியின் ஓரமாக வந்து கதிர்காமத்தை அடைந்தார்.
ஆனால் அவர் அங்கிருந்து பார்த்தால் முதலில் மலைப் பகுதியாக தெரிந்த பகுதிகள் இந்த மீரியபெத்த, கொஸ்லாந்தயாகும். அவரை தரிசிக்க செல்லும் மலையக மக்கள் கண்டி, நுவரெலியா, பண்டாரவளை, ஹப்புதளை பெரகலை கொஸ்லாந்த சென்று கதிர்காமம் செல்வார்கள்.
இது இந்தியா வம்சாவளியினரின் கதிர்காமம் செல்லும் வழி.
கொஸ்லாந்தயில் இருந்து பார்த்தால் கதிர்காமம் கடல் பகுதி வரை பார்க்கும் போது சமதரையாக தான் கண்களுக்கு தெரியும்.
அப்படிப்பட்ட புனித பிரதேசத்தை பார்க்க ,பேச தினசரி தரிசிக்க கூடிய இப்பகுதி மக்களை முருககன் கதிர்காமத்தில் இருந்து பார்த்தால் அவர் கண்ணுக்கு தெரியும் பகுதியாக கொஸ்லந்த பகுதியாகும்.
மதம் சார்பாக பார்த்தல் முருகப் பெருமானின் முக்கிய விழாவான சூரன் போர் நடைபெற்ற நாளில் இந்த கொடூர நிகழ்வு ஏற்பட்டது என்பது முக்கியமானதாகும்.
இதில் அதிக உயிர்கள் காவு கொள்ளப்பட்டது தமிழ் இனம், அவரால் முயற்சி முடியாமை எல்லாம் இந்த தமிழ் மக்களின் கடைசி செயலாகத்தான் இருந்திருக்கும்.
தங்கள் உயிர் காக்க இப்பொது நாம் சிந்தித்தால் இலங்கை தீவில் விடுதலைக்காக முயற்சித்த வடகிழக்கு தமிழினம் தங்களை காப்பாற்றிக் கொள்ள துடிதுடித்தார்களோ தங்களின் உயிரை காப்பாற்று, ஓடு ஓடு என்ற போதும் துடித்துடித்து மாண்டதோ அதே பாணியில் தான் இந்த சம்பவமும் ஒரு சில வினாடிகளில் மண்ணோடு மண்ணாக எல்லோரும் அல்லுண்டு போய் விட்டார்கள்.
அங்கு செல் தாக்குதல், புக்கார் விமான தாக்குதல், கொத்து குண்டு தாக்குதல்.
இங்கோ மண்சரிவு, வெள்ளப் பெருக்கு எவ்வாறு பார்த்தாலும் இவ்வாறான அனர்த்தங்களில் இறப்பது எல்லாம் நம் இரத்த உறவுகளே.
இன்று இலங்கை தேசத்திற்கு அந்நிய செலாவணியை அள்ளித்தந்த மக்கள் துடிதுடித்தும், அலறல் சத்தத்துடனும் ஆத்மா உடலைவிட்டு பிரிந்து போன நாள் அனைத்தும் அந்த சூரன் போர் போல் நூற்றுக்கணக்கானவர்களை பலி கொண்டு விட்டது.
இது இயற்கையின் எதிர்பாராத கொடூரம் சம்பவம் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல, இது செயற்கையின் கொடூரம். ஆம் இவர்களுக்கு இவ்வாறான நிலைவரும் என்று 2005 ஆம் ஆண்டே தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தின் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தோட்ட நிர்வாகம் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை என அரசாங்கம் தோட்ட நிர்வாகம் மீது பழி சுமத்துகின்றது.
ஒரு நாட்டில் வாழும் மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டியது தோட்ட நிர்வாகமா? அல்லது அரசாங்கமா? அப்படி பெருந்தோட்ட மக்கள் மீது தோட்ட நிர்வாகம் தான் அக்கறை கொள்ள வேண்டும் என்றால் அப்போது அரசாங்கம் எதற்கு?
கொஸ்லாந்த பகுதியின் அபாய நிலையை அறிந்த அரசு இவர்களுக்கு மாற்று வீடு கொடுத்ததாக அல்லது மாற்று நிலங்களை கொடுத்ததா? இல்லை.
28ம் திகதி வரை இம்மக்களின் வருமானத்தை உறிஞ்சி அந்நிய செலவாணியை பெற்று இந்த அரசும் அதற்கு துணைபோனவர்களும் இந்த இதய குமுறல் என்றும் எப்போதும் கேட்கப் போவதில்லை.
ஏன் என்றால் இவர்களுக்கு வாக்களித்தால் தம்மை வாழ வைப்பார்கள் என்று நம்பிய சமூகமே இந்த மலைநாட்டான் அல்லது தொட்டக்காட்டான் என்று கூறப்படும்.
உழைத்து உழைத்து உணவின்றி, உடுத்த உடையின்றி உறைவிடம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக சமூகம் இவர்களின் இறந்த உடல் இன்று மண்ணோடு புதைந்து விட்டது. அதற்கு 30 அடிக்கு மேல் மண் நிரம்பிவிட்டு.
இதை அரசும், அரசாங்கமும் நிச்சயம் பயன்படுத்தும் எப்படி என்றால் மர நடுகை திட்டம் ஆம் தமிழ் தோட்ட தொழிலாளி இருந்தாலும் அவன் உழைப்பில் அந்நிய செலாவணி இறந்தால் அவன் உடல் மேல் மரத்தை நட்டு, நாட்டிய மரத்திற்கு அவன் உடம்பு உரமாகப் போகின்றது. இது உண்மை.
இறந்த உடல்கள் இதுவரை தேயிலை செடிகளுக்கு உரமாக்கப்பட்டது. இனி மரங்களுக்கு உரமாக போகின்றது.
இதேபோல் தான் வட கிழக்கில் உயிர் நீர்த்த பலரின் உடலுக்கு மேல் மரங்கள் நாட்டப்படலாம் அல்லது நாட்டப்பட்டு இருக்கலாம்.
இவைகளை சற்று சிந்தித்துப் பார்த்தால் தமிழினம் வாழ்ந்தாலும் இறந்தாலும் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பாவ ஜென்மமாகவே இருக்கின்றது.
பண்டைய காலம் முதல் இன்றுவரை ஏன் இந்த துயரம் தமிழினத்தை தொடர்கின்றது என்பது புரியாத ஒன்றே.
இறந்தவர்கள் தமிழினம் ஆகவே அவர்களில் தப்பி பிழைத்தவர்கள் பகுத்தறிவாளனாகவோ அல்லது விழிப்புணர்வுடன் வாழ்ந்துவிட வழிவகுக்க கூடாது என்பதனாலேயோ என்னவோ வெளிநாடுகளில் இருந்துவரும் மனித நேய உதவிகளை கூட அரசாங்கம் புறம்தள்ளி இவர்களின் வாழ்வை எப்படி சூனியமாக்கலாம் என்ற எண்ணத்துடன் எப்பொழும் செயற்படுகின்ற இனவாதிகளை நாம் இப்பொழுதும் பார்க்கலாம்.
ஆகவே சகல அபிவிருத்திக்கும் வெளிநாட்டு உதவியை பெரும் இந்த ஆட்சியாளர்கள் இந்த வறுமை கொட்டிற்கு கீழ் வாழும் சமூகத்தில் தாய், தந்தை உறவினர்கள் என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் சிறார்களின் எதிர்காலத்திற்கு உதவிவரும் மனித நேயங்களைக்கூட மறுக்கும் புண்ணியவான்களாக சித்தரிக்கும் இனவாதிகளை இன்னும் இன்னும் காணாது இருக்கும் அரசியல் தலைமைகள் புத்திஜீவிகள் சமூக நல சிந்தனையாளர்கள் மௌனம் காப்பது ஏன்?
ஐ.நா சபையின் உதவியைக்கூட மறுப்பதற்கு காரணம் இந்த உதவி தமிழனுக்கு கிடைக்க கூடாது என்பதற்காவா? இது விதியா?
இல்லை விடுதலைக்கான வித்தா? தமிழ் சமூகமே உனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை வீசி ஒன்றுபடு. இறந்தவர்கள் இறந்தவர்களாக இருக்கட்டும் இது முடிந்த கதை.
ஆனால் ஆரம்பிக்க வேண்டியது இனியாவது சமூகம் என்ற அடிப்படையில் ஒன்றுபடு. எமது உடலின் மீது பசுமை என்ற பெயரில் நாட்டப்படும் மரமும், அபிவிருத்தி என்ற போர்வையில் போராடப்படும் பாதைகளும் கட்டிடங்களும் அதனை பயன்படுத்தி எதிர்கால தமிழினத்தின் வாழ்வை சுபீட்சமாக்கு இது உயிரிழந்த ஆத்மாவின் அன்பான வேண்டுகோள்.
madhavan@hi2mail.com